IPL 2022 CSK vs GT score updates: ஐபிஎல் 2022ன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணியுடன் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று பலப்பரீட்சை நடத்தின.
ஐபிஎல் போட்டிகளின் 29 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன் அணியும் மோதின. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது.
ஆல்ரவுண்ட் திறமைகளுக்கு பெயர் பெற்ற ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு சிறப்பாக சேவையாற்றியுள்ளனர். இந்தநிலையில், இன்றைய போட்டி இருவரின் கேப்டன் திறமைக்கு சவால் விடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போதைய ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. தொடர்ச்சியான முதல் 4 தோல்விகளுக்குப் பிறகு, 5ஆவது போட்டியில் தான் வெற்றி பெற்று கணக்கைத் தொடங்கியுள்ளது. அதேநேரம் குஜராத் அணி விளையாடிய 5 போட்டிகளில் 4ல் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
குஜராத் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் விளையாட வில்லை. அவருக்குப் பதிலாக ரஷித் கான் கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
சென்னை அணி விளையாடும் 11 வீரர்களின் விவரம்: ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மஹீஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி.
குஜராத் அணி விளையாடும் 11 வீரர்களின் விவரம்: விருத்திமான் சஹா, ஷுப்மன் கில், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவாதியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, யாஷ் தயாள்
சென்னை பேட்டிங்
சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய உத்தப்பா 3 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். ஷமி அவரை எல்.பி.டபுள்யூ முறையில் வெளியேற்றினார். அடுத்து களமிறங்கிய மொயீன் அலி 1 ரன்னில் அல்ஜாரி ஜோசப் பந்தில் போல்டாகி வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த ருதுராஜ் மற்றும் ராயுடு இருவரும் குஜராத் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். சிறப்பாக ஆடிய உத்தப்பா 31 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும். உத்தப்பா, ஜோசப் பந்தில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அரை சதம் கடந்த ருதுராஜ் சிறப்பாக விளையாடினார்.
ருதுராஜ் 48 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் யாஷ் தயாள் பந்தில் மனோகரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ருதுராஜ் 5 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடித்தார். அடுத்து களமிறங்கிய துபே தன் பங்கிற்கு 19 ரன்கள் அடித்து ரன் அவுட் ஆனார். கேப்டன் ஜடேஜா 2 சிக்சர்களுடன் 12 பந்தில் 22 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.
சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் தரப்பில் ஜோசப் 2 விக்கெட்களும், ஷமி மற்றும் தயாள் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
குஜராத் பேட்டிங்
குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷூப்மன் கில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த விஜய் சங்கரும் டக் அவுட் ஆக, குஜராத் அணி 2 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. சற்று நிதானமாக ஆடிய தொடக்க ஆட்டக்காரர் சஹா 11 ரன்களிலும், மனோகர் 12 ரன்களிலும் வெளியேற குஜராத் அணி 48 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய ராகுல் திவேதியா 6 ரன்களில் வெளியேறினார்.
ஒருபக்கம் சிறப்பாக விளையாடிய டேவிட் மில்லர் அரை சதம் அடித்தார். இன்னொரு பக்கம் ரஷித் கான் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினார். சிறப்பாக விளையாடிய ரஷித் கான் 20 பந்தில் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்து களமிறங்கிய ஜோசப் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். கடைசி வரை சிறப்பாக ஆடிய மில்லர் குஜராத்தை வெற்றி பெறச் செய்தார். மில்லர் 51 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். இதில் 6 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கும்.
சென்னை அணி தரப்பில் ப்ராவோ 3 விக்கெட்களும், தீக்சனா 2 விக்கெட்களும், ஜடேஜா மற்றும் சௌத்ரி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
சென்னை அணிக்கு இது 5 ஆவது தோல்வியாகும். இதனால் சென்னையில் ப்ளே ஆஃப் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.