scorecardresearch

IPL 2022 CSK vs GT; சிஎஸ்கே மீண்டும் தோல்வி; சஹா அதிரடியில் குஜராத் வெற்றி

ஐபிஎல் 2022; சென்னை அணியை வீழ்த்தியது குஜராத்; சஹா அதிரடி ஆட்டம்; குவாலிஃபையர் போட்டியில் விளையாட குஜராத் தகுதி

IPL 2022 CSK vs GT; சிஎஸ்கே மீண்டும் தோல்வி; சஹா அதிரடியில் குஜராத் வெற்றி

IPL 2022 CSK vs GT score updates: இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. குஜராத் அணி ஏற்கனவே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், ப்ளே-ஆஃப் வாய்ப்பை இழந்த சென்னை அணி கடைசி இடத்தை தவிர்க்க போராடி வருகிறது.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னையில் அணியில் உத்தப்பா, ராயுடு, ப்ராவோ, தீக்ஷானா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

சென்னை அணி விவரம்; ருதுராஜ், கான்வே, மொயீன் அலி, ஜெகதீசன், சிவம் துபே, தோனி, சாண்ட்னர், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், மதிஷா பதிரனா, முகேஷ் செளத்ரி

குஜராத் அணி விவரம்; விருத்திமான் சஹா, சுப்மன் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷித் கான், சாய் கிஷோர், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், முகம்மது ஷமி

சென்னை பேட்டிங்

சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கான்வே 5 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அவர் ஷமி பந்தில் சஹாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய மொயீன் அலி 2 சிக்சர்கள் அடித்தாலும், 21 ரன்களில் வெளியேறினார். அவர் சாய் கிஷோர் பந்தில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்ததாக ருதுராஜூடன் ஜோடி சேர்ந்த ஜெகதீசன் சிறப்பாக விளையாடினார். இருவரும் அருமையாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர். அரைசதம் அடித்த ருதுராஜ், பெரிய ஷாட் அடிக்க நினைத்து கேட்ச் ஆகி வெளியேறினார். 49 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த ருதுராஜ், ரஷித் கான் பந்தில் மேத்யூ வேட்-இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ருதுராஜ் அவுட் ஆகும்போது சென்னை அணி 16 ஓவரில் 113 ரன்கள் சேர்த்திருந்தது.

பின்னர் களமிறங்கிய சிவம் துபே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய தோனி ரன் குவிக்க தடுமாறி, 7 ரன்களில் வெளியேறினார். ஐபிஎல் வரலாற்றில் ஷமி முதன்முறையாக தோனி-ன் விக்கெட்டை வீழ்த்தினார்.

இதையும் படியுங்கள்: தாய்லாந்தில் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை

சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெகதீசன் 39 ரன்கள் சேர்த்தார். சாண்ட்னர் 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் அணி தரப்பில், ஷமி 2 விக்கெட்களையும், ரஷித் கான், சாய் கிஷோர், அல்ஜாரி ஜோசப் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

குஜராத் பேட்டிங்

பின்னர் களமிறங்கிய குஜராத் அணியில் சஹா மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சஹா அதிரடியாக ஆட, கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இணைந்து அரை சதம் அடித்த நிலையில், கில் 18 ரன்களில் அவுட் ஆனார். அவர் பதிரனா பந்தில் எல்.பி.டபுள்யூ முறையில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய மேத்யூ வேட், சஹாவுடன் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். 20 ரன்கள் சேர்த்த வேட், மொயீன் அலி பந்தில் துபேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ஒருமுனையில் சிறப்பாக ஆடி வந்த சஹா அரை சதம் அடித்தார். அடுத்ததாக களமிறங்கிய பாண்ட்யா 7 ரன்களில் அவுட் ஆனார். அவர் பதிரனா பந்தில் துபேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் சஹாவுடன் ஜோடி சேர்ந்த மில்லர் அணிக்கு வெற்றியை தேடி தந்தார். குஜராத் அணி 19.1 ஓவரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.

சஹா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் குவித்திருந்தார். மில்லர் 15 ரன்களில் களத்தில் இருந்தார். சென்னை அணி தரப்பில் பதிரனா 2 விக்கெட்களையும், மொயீன் அலி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றி மூலம் குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்குச் சென்றதுடன், முதல் அணியாக குவாலிஃபையர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சென்னை அணி 9 தோல்விகளுடன் 9 ஆவது இடத்தில் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ipl 2022 csk vs gt score updates

Best of Express