IPL 2022 mega auction Tamil News: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு (2022) தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில், தொடரில் ஏற்கனவே பங்கேற்று விளையாடி வரும் 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
மெகா ஏலத்தில் பங்கேற்கும் அணிகளின் உரிமையாளர்கள் வருகிற 30ம் தேதிக்குள், தக்கவைக்கப்பட இருக்கின்றன வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. மேலும், பிசிசிஐ விதிகளின்படி, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடியும். எனவே, எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் என்பதை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
சென்னை அணியை அடுத்த 3 சீசன்களுக்கும் வழிநடத்தும் கேப்டன் தோனி
இந்நிலையில், ஐ.பி.எல். தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட மற்றும் விடுவிக்கப்படவுள்ள வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, சென்னை அணியை நீண்டகாலமாக மற்றும் கடந்த 14 சீசன்களாக வழிநடத்தி வரும் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் அடுத்த 3 சீசன்களுக்கும் கேப்டன் தொடர உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அணி கடந்த 2021 ஐபிஎல்லில் பட்டத்தை வெல்ல முக்கிய பங்கு வகித்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரைத் தக்கவைத்துக்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
4வது வீரருக்கு இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலியுடன் சிஎஸ்கே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஐபிஎல்லின் அடுத்த சீசன் இந்தியாவில் நடைபெறும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ள நிலையில், சென்னை ஆடுகளத்தை மொயீன் அலி சாதகமாக பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது என்று சிஎஸ்கே நிர்வாகம் கருதுகிறது.
மொயீன் அலி 4வது வீரராக அணியில் தக்கவைக்கப்பட சம்மதிக்கவில்லை என்றால், இங்கிலாந்து அணியின் இடது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் சாம் கர்ரண் தக்கவைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை அணி சுரேஷ் ரெய்னாவை முதன்முறையாக தக்கவைக்க விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய பேட்ஸ்மேனும், அதிரடி வீரருமான ரெய்னா கடந்த சீசனில் முக்கியமான நாக் அவுட் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை. மேலும், அவரது பார்மில் கேள்வி எழும்பிய நிலையில் அவர் இந்த மெகா ஏலத்தில் தக்கவைக்கப்பட மாட்டார் என தெரிகிறது.
கடைசி டி20 சென்னையில் தான்…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி தக்கவைக்கப்பட இருப்பது முன்னரே தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், அவர் தனது கடைசி டி20 ஆட்டம் சென்னையில் தான் நடக்கும் என்பதை சமீபத்தில் நடந்த பாராட்டு விழாவில் உறுதி செய்திருந்தார். அப்போது பேசிய தோனி, "நான் என கிரிக்கெட் போட்டிகளை எப்போதும் திட்டமிட்டே வருகிறேன். இந்திய அணிக்கான எனது கடைசி ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடந்தது. என்னுடைய கடைசி டி20 சென்னையில் நடக்கும் என்று நம்புகிறேன். அது அடுத்த வருடமா அல்லது இன்னும் ஐந்து வருடங்கள் என எனக்குத் தெரியாது." என்று தெரிவித்தார்.
டெல்லியை மீண்டும் வழிநடத்தும் பண்ட்
இதற்கிடையில், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல், பிரித்வி ஷா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரை டெல்லி கேப்பிட்டல்ஸ் தக்க வைத்துக் கொள்ள உள்ளது. அந்த அணி ஷ்ரேயாஸ் ஐயர் விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தை நாம் அறிந்திருந்தாலும், அவர் அந்த அணியை வழிநடத்தவே விரும்பினார். ஆனால், அணி உரிமையாளார்கள் ரிஷப் பண்ட் தான் கேப்டனாக செயல்பட வேண்டும் என உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோகித் - பும்ராவுக்கு முன்னுரிமை
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை ரோகித் ஷர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை தக்க வைத்துக் கொள்ளும் என தெரிகிறது. மேற்கிந்திய தீவுகளின் (வெஸ்ட் இண்டீஸ்) ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்டுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த அணி நிர்வாகம் சூர்யகுமார் யாதவை ஏலத்தில் இருந்து வாங்க விரும்புகிறது. மேலும், இளம் வீரர் இஷான் கிஷான் தக்கவைக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.
2 புதிய அணிகளின் புதிய திட்டம்
ஐ.பி.எல். தொடரில் அடுத்த சீசன் முதல் 2 புதிய அணிகள் (சஞ்சீவ் கோயங்காவின் RPSG குழு மற்றும் CVC கேபிடல்ஸ்) சேர்க்கப்பட்டு 10 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், அந்த 2 புதிய அணிகளும் சில சிறந்த இந்திய வீரர்களை அணுகத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஞ்சீவ் கோயங்காவின் புதிய லக்னோ அணிக்கு இந்திய தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் தலைமை தாங்குவார். பஞ்சாப் கிங்ஸிலிருந்து ராகுல் விலகியதாகவும், கோயங்காவின் வாய்ப்பை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சூர்ய குமார் யாதவ் புதிய அணியால் அணுகப்பட்டார் எனவும், ஆனால் அவர் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதும் அறியப்படுகிறது.
வெளிநாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கொல்கத்தா
இதற்கிடையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது இரண்டு ஆல்-ரவுண்டர்களான சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் அவர்கள் வருண் சக்ரவர்த்தியையும் தக்கவைக்க விரும்புகிறார்கள். சுப்மான் கில் அல்லது வெங்கடேஷ் ஐயரை தக்கவைப்பதா என்பது குறித்து கொல்கத்தா அணி இன்னும் முடிவெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெகா ஏலத்தில் தக்கவைக்கப்பட உள்ள வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-
சென்னை சூப்பர் கிங்ஸ்:-
மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி அல்லது சாம் கர்ரண்
டெல்லி கேப்பிட்டல்ஸ்:-
ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே
மும்பை இந்தியன்ஸ்:-
ரோஹித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா, கீரன் பொல்லார்ட் (பேச்சு வார்த்தையில்), இஷான் கிஷான் (அநேகமாக)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:-
சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.