ஐபிஎல் 2022-ம் ஆண்டு சீசனை முன்னிட்டு, விரர்களின் ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்கவைத்துக்கொண்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சிஎஸ்கே கேப்டன் தோனியை தக்கவைத்துக்கொண்டது. ரோகித் சர்மாவை தக்கவைத்துக்கொண்ட மும்பை அணி 3 முக்கிய வீரர்களை கழற்றிவிட்டுள்ளது.
ஐபிஎல் 2022-ம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக, ஐ.பி.எல் அணிகள், ஏற்கெனவே அணியில் உள்ள வீரர்களில் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள முடியும்.
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் அதிகபட்சமாக 90 கோடி ரூபாய் வரை செலவு செய்ய முடியும். ஒரு அணி 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டால், வீரர்களை ஏலம் எடுப்பதற்காக அந்த அணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட 90 கோடி ரூபாய் கணக்கிலிருந்து 42 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்படும். அதுவே 3 வீரர்களை தக்கவைத்துக்கொண்டால் ரூ. 33 கோடி பிடித்தம் செய்யப்படும். 2 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டால் ரூ.24 கோடி மட்டும் பிடித்தம் செய்யப்படும். அதுவே ஒரு வீரரை மட்டும் தக்க வைத்து கொண்டால் ரூ.14 கோடி மட்டும் பிடித்தம் செய்யப்படும்.
இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் தங்கள் அணியில் தக்கவைத்துக்கொண்ட வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) கேப்டன் தோனியை தக்கவைத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை தக்கவைத்துக்கொண்டுள்ளது. சி.எஸ்.கே அணி ரவீந்திர ஜடேஜா (16 கோடி), மகேந்திரசிங் தோனி (12 கோடி), மொயின் அலி (8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. சுரேஷ் ரெய்னா, ஃபாஃப் டூ பிளஸியை விடுவித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலி (15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (11 கோடி), முகமது சிராஜ் (7 கோடி) ஆகியோரை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆர்.சி.பி அணி 4வது வீரரை தக்கவைக்கவில்லை. யுஜ்வேந்திர சாஹலை ஏலத்தின்போது எடுப்போம் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி
மும்பை இந்தியன்ஸ் அணி, கேப்டன் ரோஹித் ஷர்மா (16 கோடி), ஜஸ்ப்ரீத் பும்ரா (12 கோடி), கெய்ரன் பொல்லார்ட் (6 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி) ஆகியோரை தக்கவைத்துக்கொண்டுள்ளது. அதே நேரத்தில், பாண்டியா சகோதரர்கள், இஷான் கிஷன், டிரன்ட் போல்ட் போன்ற முக்கிய வீரர்கலை கழற்றிவிட்டுள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சன் (14 கோடி), அப்துல் சமத் (4 கோடி), உம்ரான் மாலிக் (4 கோடி) வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு இடம் அளிக்கப்படவில்லை.
டெல்லி கேபிடல்ஸ் அணி
டெல்லி கேபிடல்ஸ் அணி ரிஷப் பந்த் (16 கோடி), அக்சர் படேல் (9 கோடி), பிரித்வி ஷா (7.5 கோடி), ஆன்ரிக் நோர்க்கியா (6.5 கோடி) ஆகியோரை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஷ்ரேயஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றவர்களை தக்கவைக்கவில்லை. அவர்களை டெல்லி அணி ஏலத்தில் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆண்ட்ரே ரஸல் (12 கோடி), வருண் சக்ரவர்த்தி (8 கோடி), வெங்கடேஷ் ஐயர் (8 கோடி), சுனில் நரைன் (6 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. கேப்டன் இயான் மோர்கன், ஷுப்மன் கில் விடுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் (14 கோடி), ஜாஸ் பட்லர் (10 கோடி), யாஷஸ்வி ஜெய்ஷ்வால் (4 கோடி) ஆகியோரை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
2022ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தில் இந்த அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.