IPL 2022 Tamil News: 15-வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் - 2022) கிரிக்கெட் போட்டிகள் வருகிற மார்ச் மாதம் 26 ஆம் தேதி முதல் தொடங்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியம், பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் 55 போட்டிகள் நடைபெறும் என்றும், மீதமுள்ள 15 ஆட்டங்களுக்கு புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடக்கும் என்றும் பிசிசிஐ அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, போட்டிகளை அந்தந்த ஹோம் மைதானங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று யோசிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை நடந்த விர்ச்சுவல் கூட்டத்தில், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளை இந்தியாவில் ஒரே இடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழுக்கு பிசிசிஐ அதிகாரி அளித்துள்ள பேட்டியில், “ஐபிஎல் அணிகளால் கொரோனா பாதுகாப்பு குமிழி மீறல் ஏற்பட்டதை அடுத்து, கடந்த சீசனைப் போன்ற ஒரு சூழ்நிலையை நாங்கள் விரும்பவில்லை. அணிகள் பேருந்தில் பயணிக்கக்கூடிய ஒரு மாநிலத்தில் போட்டியை நடத்துவது நல்லது, ”என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானம், DY பாட்டீல் மற்றும் ப்ரபோர்ன் ஆகிய மைதானங்களை பத்து ஐபிஎல் அணிகளுக்கான பயிற்சிக்கான இடங்களாக இந்திய வாரியம் இறுதி செய்துள்ளது. மேலும், தானேவின் தாடோஜி கோண்டேவ் ஸ்டேடியம் மற்றும் எம்சிஏ-காண்டிவலி மைதானம் ஐபிஎல் அணி பயிற்சி அமர்வுகளுக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல் திருவிழா சென்னையில் இல்லை
இந்தாண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் இரண்டு புதிய அணிகள் குஜராத்தின் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் களமிறங்க உள்ளன. ஐ.பி.எல் தொடருக்கான பெரும்பாலான தொடக்க போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலே அரங்கேறும். ஆனால், இம்முறை கொரோனா தொற்று அச்சம் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் போட்டிகள் நடைபெறும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பெண்களுக்கான கண்காட்சி விளையாட்டு
புனேவில் பெண்களுக்கான டி20 கண்காட்சி கிரிக்கெட் போட்டியை நடத்த இந்திய வாரியம் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், அடுத்த ஆண்டு முழு அளவிலான மகளிர் ஐபிஎல் நடத்துவது குறித்து நேற்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சந்தேக நடவடிக்கை குழுவில் ஸ்ரீநாத், ஓஜா
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத், இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா மற்றும் இந்திய நடுவர் ஆகியோர் ஐபிஎல் போட்டியின் போது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை தொடர்பான வழக்குகளை கவனிக்கும் சந்தேக நடவடிக்கை குழுவில் இடம் பெற்று இருக்கிறார்கள்.
ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா?
ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், "ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26 அன்று தொடங்கும். தொடருக்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த கடந்த ஐபிஎல் 2021 போன்று இந்த சீசன் இருக்காது.
இந்தாண்டுக்கான தொடர் கடந்த சில சீசன்களை போல காலியான ஸ்டாண்டுகளுக்கு முன்னால் போட்டிகள் விளையாடப்படாது. ரசிகர்களுக்கான அனுமதி ஸ்டேடியத்தின் கொள்ளளவில் 25 அல்லது 50 சதவீதம் இருக்குமா என்பது மகாராஷ்டிர அரசின் அறிவுறுத்தலின் படி தான் முடிவு செய்யப்படும்" என்று அவர் கிரிக்பஸ் இணைய பக்கத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.