Advertisment

CSK vs KKR Highlights: சென்னையின் போராட்டம் வீண்; வெற்றியுடன் தொடங்கியது கொல்கத்தா!

IPL 2022 Match Chennai Super Kings vs Kolkata Knight Riders - Check Live score and live updates Tamil News: ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வெற்றி பெற்றது.

author-image
WebDesk
New Update
IPL 2022 Tamil News: CSK vs KKR live score

IPL 2022 Live Match CSK vs KKR, Live score updates in tamil: ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று சனிக்கிழமை நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

Advertisment

சென்னை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ரன் எதுவும் இன்றி ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவருடன் மறுமுனையில் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரர் கான்வேயும் 3 ரன்களில் அவுட் ஆகினார்.

எனினும், ஓரளவு அதிரடி காட்டிய ராபின் உத்தப்பா 28 ரன்கள் சேர்த்த நிலையில் வருண்சக்கரவர்த்தி சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார். 15 ரன்கள் சேர்த்த அம்பத்தி ராயுடு ரன் அவுட் ஆனார். பிறகு வந்த ஷிவம் துபே 3 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.

7 -வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய டோனி, துவக்கத்தில் நிதானம் காட்டினார். அவருடன் இணைந்த ஆடி வந்த கேப்டன் ஜடேஜாவும் நிதானத்தை கடைபிடித்தார். இதனால் சென்னை அணியின் ரன் ரேட் நத்தை வேகத்தில் நகர்ந்தது.

18வது ஓவரில் அதிரடியை தொடங்கிய தோனி ஆட்டத்தின் இறுதிவரை அதை தொடர்ந்தார். அவர் 38 பந்துகளில் 1 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 50 ரன்களை சேர்த்தார். கேப்டன் ஜடேஜா 28 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார்.

இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 132 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்க கிடைத்தது. அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தாலும், களமாடிய வீரர்கள் மட்டையை சுழற்றியதால் ரன்கள் வந்து சேர்ந்தன. இதனால் அந்த அணி 18.3 ஓவர்களிலேயே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியது. மேலும் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ரஹானே 44 ரன்களை சேர்த்தார். சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக பிராவோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 23:27 (IST) 26 Mar 2022
    கொல்கத்தா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

    ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்த நிலையில், தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.


  • 22:59 (IST) 26 Mar 2022
    வெற்றியை நோக்கி கொல்கத்தா!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் 132 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திவரும் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணி தற்போது வரை 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.


  • 22:33 (IST) 26 Mar 2022
    ரஹானே அவுட்!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் 132 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திவரும் கொல்கத்தா அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் அஜிங்க்யா ரஹானே 44 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார்.


  • 22:29 (IST) 26 Mar 2022
    2 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிராவோ!

    கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை அணியின் பிராவோ தனது பாணியில் நடமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


  • 22:26 (IST) 26 Mar 2022
    10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி!

    சென்னை அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் 132 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திவரும் கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 83 ரன்களை சேர்த்துள்ளது.


  • 22:05 (IST) 26 Mar 2022
    வெங்கடேஷ் ஐயர் அவுட்!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் 132 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திவரும் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்திருந்தார். அவரது விக்கெட்டை பிராவோ வீழ்த்தினார்.


  • 22:02 (IST) 26 Mar 2022
    பவர் பிளே முடிவில் கொல்கத்தா அணி!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் 132 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திவரும் கொல்கத்தா அணி பவர் பிளே முடிவில் (6 ஓவர்கள்) விக்கெட் இழப்பின்றி 43 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் 16 ரன்களுடனும், அஜிங்க்யா ரஹானே 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


  • 22:02 (IST) 26 Mar 2022
    சிக்ஸர் பறக்க விட்ட ஜடேஜா... அரைசதம் விளாசிய தோனி... கொல்கத்தாவுக்கு 132 ரன்கள் இலக்கு!

    ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் சேர்த்தது. இதனால் கொல்கத்தா அணிக்கு 132 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    5வது விக்கெட்டுக்கு பிறகு களமாடிய தோனி கேப்டன் ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். அவர் 38 பந்துகளில் 1 சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 50 ரன்களை சேர்த்தார். கேப்டன் ஜடேஜா 28 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார்.


  • 21:50 (IST) 26 Mar 2022
    களத்தில் கொல்கத்தா அணி!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் விளையாடி வரும் கொல்கத்தா அணிக்கு 132 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 132 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திவரும் அந்த அணியில் தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஜோடி களமிறங்கி விளையாடி வருகிறது.


  • 20:52 (IST) 26 Mar 2022
    15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி!

    கொல்கத்தா அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் விளையாடி வரும் சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை சேர்த்துள்ளது.


  • 20:37 (IST) 26 Mar 2022
    களத்தில் 'தல' தோனி!

    கொல்கத்தா அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் விளையாடி வரும் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தற்போது அணியின் முன்னாள் கேப்டன் தோனி களமிறங்கி ஆடி வருகிறார்.


  • 20:30 (IST) 26 Mar 2022
    ஷிவம் துபே அவுட்!

    கொல்கத்தா அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் விளையாடி வரும் சென்னை அணியில் அம்பதி ராயுடுவின் விக்கெட்டுக்கு பிறகு, ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த ஷிவம் துபே 3 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.


  • 20:25 (IST) 26 Mar 2022
    10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி!

    கொல்கத்தா அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் விளையாடி வரும் சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 57 ரன்களை சேர்த்துள்ளது.


  • 20:22 (IST) 26 Mar 2022
    தொடரும் விக்கெட் சரிவு; சறுக்கும் சென்னை!

    கொல்கத்தா அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் விளையாடி வரும் சென்னை அணி 10 ஓவர்கள் முடிவதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


  • 20:16 (IST) 26 Mar 2022
    உத்தப்பா அவுட்!

    கொல்கத்தா அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் விளையாடி வரும் சென்னை அணியில் அதிரடியாக விளையாடி வந்த ராபின் உத்தப்பா 21 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசி 28 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.


  • 20:08 (IST) 26 Mar 2022
    பவர் பிளேயில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய உமேஷ்!

    சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீசி வரும் கொல்கத்தா அணி வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் பவர் பிளேயில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவர் சென்னையின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


  • 20:04 (IST) 26 Mar 2022
    பவர் பிளே முடிவில் சென்னை அணி!

    கொல்கத்தா அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை அணி பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களை சேர்த்துள்ளது.


  • 20:00 (IST) 26 Mar 2022
    கான்வே அவுட்!

    சென்னை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய தொடக்க வீரர் டெவான் கான்வே 3 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.


  • 19:59 (IST) 26 Mar 2022
    ருதுராஜ் அவுட்!

    கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி சார்பில் களமிறங்கிய தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் இன்றி வெளியியேறினார்.


  • 19:57 (IST) 26 Mar 2022
    ஆட்டம் இனிதே ஆரம்பம்!

    ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.


  • 19:32 (IST) 26 Mar 2022
    ஐ.பி.எல் 2022: சென்னைக்கு எதிரான ஆட்டம்; டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு!

    ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.


  • 19:28 (IST) 26 Mar 2022
    இரு அணிகளின் சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்!

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்):

    வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர்(கேட்ச்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ்(டபிள்யூ), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷெல்டன் ஜாக்சன், உமேஷ் யாதவ், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி

    சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):

    ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேட்ச்), ஷிவம் துபே, எம்எஸ் தோனி (வ), டுவைன் பிராவோ, மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே


  • 19:28 (IST) 26 Mar 2022
    ஐ.பி.எல் 2022: சென்னைக்கு எதிரான ஆட்டம்; டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு!

    ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த்துள்ளது.


  • 19:07 (IST) 26 Mar 2022
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்!

    வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர், ஷெல்டன் ஜாக்சன், அஜிங்க்யா ரஹானே, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், சிவம் மவி, வருண் சக்ரவர்த்தி, சாம் பில்லிங்ஸ், அனுகுல் ராய், ரசிக் சலாம், அபிஜேத் சலாம். சிங், அமன் கான், ரமேஷ் குமார், அசோக் ஷர்மா, டிம் சவுத்தி, அலெக்ஸ் ஹேல்ஸ், முகமது நபி, உமேஷ் யாதவ், பி இந்திரஜித், சமிகா கருணாரத்னே.


  • 19:07 (IST) 26 Mar 2022
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் பட்டியல்!

    ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, மொயீன் அலி, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, தீபக் சாஹர், டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, கேஎம் ஆசிப், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, என் ஜெகதீசன், ஹரிகேஷ்பதி, நிஷாந்த், சுப்ரான்ஷுபதி சௌத்ரி, சிமர்ஜீத் சிங், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், பகத் வர்மா, பிரசாந்த் சோலங்கி, கிறிஸ் ஜோர்டான், டுவைன் பிரிட்டோரியஸ், டெவோன் கான்வே, ஆடம் மில்னே, மிட்செல் சான்ட்னர்.


  • 19:07 (IST) 26 Mar 2022
    வான்கடே எப்படி?

    இன்றைய ஆட்டம் நடக்கும் மும்பை வான்கடே ஆடுகளம் செம்மண் நிறைந்தது. பந்து நன்கு பவுன்ஸ் ஆகும். அதே நேரத்தில் பேட்டிங்குக்கும் உகந்ததாக இருக்கும். மைதானத்தின் நேர்பகுதி பவுண்டரி தூரம் குறைவாக உள்ளது. எனவே இங்கு 170-180 ரன்கள் வரை எடுத்தால் தான் சவாலான ஸ்கோராக இருக்கும்.


  • 18:50 (IST) 26 Mar 2022
    நேருக்கு நேர்!

    சென்னை - கொல்கத்தா அணிகள் இதுவரை 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் சென்னையும், 8-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றன. கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் சந்தித்த போது சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பட்டத்தை உச்சிமுகர்ந்தது. அதனால் அதற்கு பழிதீர்க்கும் வேட்கையுடன் கொல்கத்தா அணியினர் வரிந்துகட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.


  • 18:33 (IST) 26 Mar 2022
    கொல்கத்தாவின் பலவீனம்!

    பலம் பொருந்திய அணியாக தென்படும் கொல்கத்தா அணியில் திறன்மிகுந்த இந்திய வீரர்கள் பற்றாக்குறை உள்ளது. இதேபோல் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்யும் முறையான வீரர்களை அந்த அணி வாங்கவில்லை. ஏலத்தின் கடைசி நேரத்தில் தான் சாம் பில்லிங்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரை வாங்கி சேர்த்தது. அந்த அணிக்கு மற்றொரு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுவது ஆண்ட்ரே ரஸ்ஸலின் உடற்தகுதி தான். அவர் பீல்டிங் செய்ய டைவ் அடிக்கும் போது அவருக்கு பலமான காயம் ஏற்பட்டு விடுகிறது. இது அணியை முற்றிலும் பாதிக்கிறது. அவர் ஃபிட் ஆக இருக்கும் பட்சத்தில் அணி சமபலம் பெறும்.


  • 18:32 (IST) 26 Mar 2022
    கொல்கத்தாவின் பலம்!

    கொல்கத்தா அணிக்கான பேட்டிங் வரிசையில் வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, நிதிஷ் ராணா போன்ற அனுபவமுள்ள வீரர்கள் உள்ளனர். இதேபோல், சாம் பில்லிங்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் போன்ற தரமான ஆல்ரவுண்டர் வீரர்கள் உள்ளனர். வருண் சக்ரவர்த்தி கடந்த சீசன்களை போல் இந்த சீசனிலும் சுழலில் வித்தை காட்டுவார் என எதிர்பார்க்கலாம்.

    வேகத் தாக்குதலுக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், சிவம் மாவி, உமேஷ் யாதவ், டிம் சவுத்தி போன்ற பிரபல வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.


  • 18:24 (IST) 26 Mar 2022
    புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்

    ஐபிஎல் தொடரில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசனில் நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோல்வியை தழுவியது. மெகா ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை ரூ. 12.25 கோடிக்கு வாங்கி கொல்கத்தா அணி அவரையே அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் 2020ம் ஆண்டில் நடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை திறம்பட வழிநடத்தி இருந்தார். அதே பாணியுடன் அவர் செயல்படுவார் என எதிர்பார்க்கலாம். தவிர, சமீப காலமாக அவர் வலுவான ஃபார்மிலும் உள்ளார். இது அணிக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.


  • 18:24 (IST) 26 Mar 2022
    பேட்டிங்கில் மிரட்டுவாரா தோனி!

    சென்னை அணியின் அசைக்க முடியாத கேப்டனாக இருந்த தோனி தற்போது சாதாரண வீரராக களமிறங்க உள்ளார். அவர் கடந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், அவரது தற்போதைய ஃபார்ம் குறித்து கவலை தொற்றிக் கொண்டுள்ளது. ஆனால், அதிலிருந்தும் தோனி மீளக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவர் தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


  • 18:16 (IST) 26 Mar 2022
    சென்னை அணியின் பலம் பலவீனம்

    சென்னை அணியால் மெகா ஏலத்திற்கு முன்னதாக தக்கவைக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் வீரர் மொயீன் அலி விசா பிரச்சினையால் தாமதமாக அணியில் இணைந்துள்ளார். எனினும், அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடமாட்டார். இதே போல் ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயத்தில் இருந்து மீளாததால், அவர் தொடரில் பல ஆட்டங்களில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை. இது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    இருப்பினும், கடந்த சீசனில் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை வசப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, வெய்ன் பிராவோ, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா போன்ற மேட்ச் வின்னர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    ஆல்ரவுண்டர்களாக சிவம் துபே, கிறிஸ் ஜோர்டான், மிட்செல் சான்ட்னர் போன்ற வீரர்கள் இருக்கின்றனர். சுழலில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயீன் அலியுடன் சேர்ந்து மிரட்ட மிட்செல் சான்ட்னர் மற்றும் இலங்கை ஆஃப் ஸ்பின்னர் மகேஷ் தீக்ஷனா போன்ற தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள். வேகப்பந்துவீச்சுக்கு கேஎம் ஆசிப், துஷார் தேஷ்பாண்டே, நியூசிலாந்தின் ஆடம் மில்னே மற்றும் இந்திய இளம் வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் போன்ற வீரர்கள் உள்ளனர்.


  • 18:05 (IST) 26 Mar 2022
    புதிய கேப்டனாக ஜடேஜா!

    ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 4 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது. 5 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அணியின் நீண்ட கால கேப்டனாக இருந்த எம்.எஸ் தோனி தற்போது தனது பதவியை ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜாவிடம் வழங்கி இருக்கிறார். எனினும் அவர் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவார் எனத் தெரிகிறது எனவே, தோனியுடன் இணைந்து ஜடேஜா அணியை சிறப்பாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கலாம்.


  • 17:50 (IST) 26 Mar 2022
    கொரோனா அச்சம் - ஒரே மாநிலத்தில் போட்டி!

    இந்தியாவில் கொரோனா தொற்று அச்சம் இன்னும் நீடித்து வரும் நிலையில், அதை தவிர்க்கும் விதமாக இந்த முறை லீக் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மைதானங்களில் நடத்தப்பட உள்ளன. மும்பையில் உள்ள 3 மைதானங்களில் 55 ஆட்டங்களும், புனேயில் 15 ஆட்டங்களும் இடம் பெறுகிறது. பிளே-ஆப் மற்றும் மே 29-ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டி இடம் விவரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  • 17:33 (IST) 26 Mar 2022
    போட்டி முறையில் மாற்றம்:

    ஐபிஎல் 2022 தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் 2 புதிய அணிகள் இணைந்துள்ள நிலையில், அதிக முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் 10 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி குழு - ‘ஏ’ பிரிவில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், குழு - ‘பி’ பிரிவில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

    இந்த அட்டவணையின் படி, ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். எதிர்பிரிவில் உள்ள 5 அணிகளில் 4 அணிகளுடன் தலா ஒரு முறையும், தங்களுக்கு நிகரான அணியுடன் மட்டும் 2 முறையும் மோத வேண்டும். இதனால், ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டி இருக்கும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.


  • 17:13 (IST) 26 Mar 2022
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


Chennai Super Kings Ipl Live Cricket Score Live Updates Ipl Cricket Ipl News Ipl Live Score Kolkata Knight Riders Vs Chennai Super Kings Ipl 2022 Mumbai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment