David Warne Tamil News: கிரிக்கெட் ரசிகர்களை மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் குஷிப்படுத்தும் வீரர்களில் ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் டேவிட் வார்னரும் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதாபாத் அணிக்காக விளையாடி வந்த இவர், அந்த அணியை சிறப்பாகவே வழிநடத்தி இருந்தார். இவரது தலைமையிலான ஐதராபாத் அணி 2016ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆனால், நடந்து முடிந்த 2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். சீசனில் அவரால் சிறப்பாக அணிக்கு பங்களிக்க முடியவில்லை. இதை காரணம் காட்டிய ஐதராபாத் அணி நிர்வாகம் அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது. மேலும், பிளேயிங் 11ல் இருந்தும் அவரை நீக்கியது.

இந்த சம்பவங்களால் வார்னர் வருத்தம் அடைந்தாரோ இல்லையோ, அவரை பின்தொடர்ந்த பல மில்லியன் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். ஒரு மாபெரும் கேப்டனை இப்படியா செய்வது என்ற வருத்தத்தில் புலம்பி தள்ளினர். சீசன் முடிந்ததும் வார்னர் ஐதராபாத் அணியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு ஒன்றும் வெளியிட்டார். மேலும், தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி எனவும் கூறினார்.
வார்னர் ஐதராபாத் அணியிலிருந்து விலகிய நிலையில் அவர் அடுத்த சீசன் எந்த அணியில் களமிறங்குவார் என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும், அவர் மெகா ஏலத்தில் கலந்து கொள்வாரா? அல்லது புதிய அணிகளான அகமதாபாத் மற்றும் லக்னோ அணியில் நேரடியாக இணைந்து கொள்வாரா என்கிற கேள்வியும் எழுந்து வந்தது.
மெகா ஏலத்தில் களமிறங்கும் வார்னர்
இந்த நிலையில், வார்னர் தான் மெகா ஏலத்தில் கலந்து கொள்ள இருப்பதாக சமூக வலைதளத்தில் “க்களூ” கொடுத்துள்ளார். சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் ஐ.பி.எல். குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள வார்னர், தான் மெகா ஏலத்தை எதிர்நோக்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் ஐ.பி.எல். மெகா ஏலத்தில் பங்கேற்க போவது உறுதியாகிவிட்டது.

வார்னர் சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை தட்டி சென்றுள்ள நிலையில், அவரை அணிகள் வாங்க போட்டிபோடும் என்பதில் சந்தகேமில்லை. எனவே அவரது ஊதியம் பல கோடிகளை தாண்டும் என எதிர்பார்க்கலாம்.
Is Warner coming to mega auction? pic.twitter.com/qoFSPgHmR4
— Johns. (@CricCrazyJohns) December 5, 2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“