IPL 2023 – 4 Indian Test veterans leading the way Tamil News: கிரிக்கெட்டின் உச்சம் என ‘ டெஸ்ட் கிரிக்கெட்’ தான் என பல கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகிறார்கள். அதிக தொகையை ஈட்டுவதற்கான வழியாக ‘டி20’ லீக்-குகளை பார்க்கிறார்கள். அதனால், டி20 போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மெட்டில் இருந்து பெரிதும் வேறுபடுகிறது. இதில் உள்ள உத்திகள் மற்றும் தந்திரங்களும் மிகவும் வேறுபட்டவை.
இருப்பினும், சில டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களும் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் தீவிரமாக விளையாடி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அத்தகைய நிலையற்ற வடிவத்தில் கூட அவர்கள் வழங்கும் திறன்களுக்கு மதிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்படும் 4 அனுபவமுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களைக் குறித்து இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
- அஜிங்க்யா ரஹானே
இந்தியாவுக்காக 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 38.52 சராசரியில் 4931 ரன்கள் எடுத்த வீரராக அஜிங்க்யா ரஹானே உள்ளார். 12 சதங்கள் மற்றும் 25 அரை சதங்களையும் அவர் விளாசியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த 2020 – 21 பார்டர்-கவாஸ்கர் டிராபி வென்ற கேப்டனான அவர் ஜனவரி 2022ல் டெஸ்ட் அணியில் இருந்து கைவிடப்பட்ட பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி வரும் ரஹானே, 6 இன்னிங்ஸ்களில் 44.80 சராசரி மற்றும் 189.93 ஸ்ட்ரைக் ரேட்டில் 224 ரன்கள் எடுத்துள்ளார். அவரது இந்த அதிரடியான ஆட்டம் அவருக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்திய அணி வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
- முகமது ஷமி
இந்திய வலது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி ரெட்-பால் கிரிக்கெட்டில் 27.48 சராசரி மற்றும் 49.9 ஸ்ட்ரைக் ரேட்டில் 225 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். 32 வயதான இவர், புதிய பந்தை நகர்த்தி பழையதை மாற்றும் திறன் கொண்டவர்.

ஷமி தற்போது நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரருக்கான பர்பிள் கேப்-பை வசப்படுத்தியுள்ளார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 14.52 சராசரி, 7.07 என்ற எக்கனாமி விகிதம் மற்றும் 12.35 ஸ்ட்ரைக் ரேட் ஆகியவற்றில் 17 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது, அவரது அணி தோல்வியடைந்தாலும், அவர் விக்கெட் வீழ்த்தியது பார்ப்பதற்கு விருந்தாக இருந்தது.
- ரவீந்திர ஜடேஜா
இந்திய ஆல்-ரவுண்டர் வீரரான ரவீந்திர ஜடேஜா உலகின் மிகவும் மதிப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 24.22 சராசரியில் 264 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் மற்றும் 35.91 சராசரியில் 2658 ரன்கள் எடுத்துள்ளார். 2500 ரன்களுக்கு மேல் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய சில கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ஜடேஜாவுக்கும் அவர் களமாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கடந்த ஆண்டு ஐபிஎல் சீசன் ஒரு அதிருப்தியாக அமைந்து போனது. ஆனால், இந்த ஆண்டு சிறப்பானதாக இருந்து வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 14 விக்கெட்டுகளை 17.92 சராசரியில் மற்றும் 7.17 என்ற எக்கனாமி விகிதத்தில் எடுத்துள்ளார். மேலும் 144 ஸ்டிரைக் ரேட்டில் 92 ரன்களை எடுத்துள்ளார்.
- ரவிச்சந்திரன் அஸ்வின்</strong>
டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் வலம் வருகிறார். 92 போட்டிகளில் 23.93 சராசரியில் 474 விக்கெட்டுகளையும், எக்கனாமி விகிதம் 2.78 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 51.8 எனவும் அவர் சிறந்த சாதனையை படைத்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை (2-1) இந்தியா வென்றதில் அவரது பங்கு அளப்பரியது. .

ஐ.பி.எல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக அஸ்வின் ஒரு சிறந்த டி20 ஸ்பின்னர் என்பதையும் நிரூபித்துள்ளார். இந்த சீசனிலும் தனது மாயாஜால சுழலில் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். இதுவரை 9 போட்டிகளில் களமாடியுள்ள அவர் 20 சராசரியில் 13 விக்கெட்டுகளையும், எகானமி ரேட் 7.22 மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஸ்டிரைக் ரேட் 16.61 ஆகவும் எடுத்துள்ளார். லோ-ஆடரில் பேட்டராக, அவர் 144 ஸ்டிரைக் ரேட்டில் 65 ரன்கள் எடுத்துள்ளார்.