IPL 2023 - Chennai Super Kings Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில், அடுத்த சுற்றான பிளேஆஃப் வருகிற செவ்வாய் கிழமை (மே.23) முதல் தொடங்குகிறது. இந்த பிளேஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் தகுதி பெற்றுளளது. மற்ற 3 இடங்களுக்கு 6 அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
தோனி ஓய்வு - குவியும் ரசிகர்கள்
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் எம்.எஸ் தோனி, நடப்பு சீசனுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது. இதனால், சென்னை அணியின் போட்டி நடக்கும் சேப்பாக்கம் மற்றும் வெளிமாநில மைதானங்களில், 'அவரை ஒருமுறையாவது நேரில் பார்த்து விட வேண்டும்' என விரும்பும் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையின் சொந்த மைதானத்தில் ரசிகர்கள் அலைகடல் போல் திரண்டு வருகிறார்கள்.
கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை
தோனியை நிச்சம் பார்த்து விட வேண்டும் என விரும்பும் ரசிர்கள், அதற்காக டிக்கெட்டை என்ன விலை கொடுத்தும் வாங்க தயாராக உள்ளனர். வழக்கமாக ரூ. 1,500 முதல் ரூ. 2,000 வரை விற்பனை செய்யப்படும் லோயர் ஸ்டாண்ட் டிக்கெட்டுகள், கள்ளச் சந்தையில் சுமார் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
காலை 7 மணிக்கு திறக்கப்படும் கவுண்டருக்காக ரசிகர்கள் முந்தைய நாள் இரவு முதல் கால்கடுக்க காத்திருக்க வேண்டி சூழல் ஏற்படுகிறது. இந்த ரசிர்களுக்கு மத்தியில் ஃபேக் ஃபேன்ஸ் என்று கூறப்படும் போலி ரசிகர்கள் ஊடுருவி, தலா 2 டிக்கெட்டுகளை பெற்று தங்களுக்கு பணம் கொடுத்து வரிசையில் நிற்க சொன்ன மர்ம நபரிடம் கொடுக்கின்றனர். அதை அந்த நபர் கள்ளச் சந்தையில் 2 முதல் 4 மடங்கு வரை உயர்த்தி விற்பனை செய்கிறார். சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அவர்கள் விற்பனை செய்கின்றனர்.
ஆன்லைன் மற்றும் கவுண்டர் விற்பனையைத் தொடர்ந்து, டிக்கெட் கிடைக்காததால், சென்னை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். இது சென்னை அணியால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கு
இந்நிலையில், ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆகிய நிர்வாகங்களுக்கு எதிராக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை அணியின் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து, சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் அசோக் சக்கரவர்த்தி தனது முகநூல் பதிவில், "சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் கள்ளச் சந்தைக்கு வழிவகுத்த டிக்கெட் விற்பனையில் முறைகேடுகள் மற்றும் ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ மற்றும் டிஎன்சிஏ மீது வழக்குப் பதிவு செய்துள்ளேன்.
"எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் பிளேஆஃப்களுக்கான டிக்கெட் விற்பனையை தற்காலிகமாக நிறுத்துவது குறித்தும் வழக்கின் போது விவாதிக்கப்படும். அடுத்த வாரம் சென்னையில் நடைபெறவுள்ள பிளேஆஃப் சுற்றுக்கான டிக்கெட் விற்பனைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை செய்துள்ளேன். மேலும் சென்னையில் நடந்த முந்தைய போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு பதிவை விவரங்களை வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
அடுத்த வாரத்தில் தொடங்கும் பிளேஆஃப் சுற்றின் முதல் தகுதி (மே.23) மற்றும் எலிமினேட்டர் (மே.24) போட்டிகள் சென்னை சேப்பாக்கம் நடக்கின்றன. அந்த விளையாட்டுகளுக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழன்) முதல் அதிகாரப்பூர்வ ஐபிஎல் இணையதளத்தில் பிரத்தியேகமாக கிடைக்கும்.
முன்னதாக, டிக்கெட்டுகள் விற்பனை தொடர்பாக சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் பேசுகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு 20% டிக்கெட்டுகளை வழங்க உரிமை உண்டு என்றும், அதை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கிளப் அணிகளுக்கு 13,000 டிக்கெட்டுகளை வழங்குவதற்கும் உரிமை உண்டு என்று தெரிவித்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.