Chennai Super Kings’ Batting Coach Mike Hussey On Skipper MS Dhoni Retirement Plans Tamil News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் எம்.எஸ் தோனி, நடப்பு சீசனுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது. இதனால், சென்னை அணியின் போட்டி நடக்கும் சேப்பாக்கம் மற்றும் வெளிமாநில மைதானங்களில், ‘அவரை ஒருமுறையாவது நேரில் பார்த்து விட வேண்டும்’ என விரும்பும் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையின் சொந்த மைதானத்தில் ரசிகர்கள் அலைகடல் போல் திரண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், தோனி தான் ஓய்வு பெற போவது குறித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் நடப்பு சீசனின் போது குறிப்பிட்டார். ஆனால், கேப்டன் தோனி 2024 சீசனிலும் விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸின் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹஸ்ஸி, தோனி தனது ஓய்வு குறித்து தன்னிடம் பேசவில்லை என்றும், அவர் தனது கடைசி ஐ.பி.எல் விளையாடுகிறாரா இல்லையா என்பது அவருக்கு மட்டுமே தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை - டெல்லி போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஹஸ்ஸி, “நாங்கள் பேசாத விஷயம் அது. அவர் தனது கடைசி ஐபிஎல் விளையாடுகிறாரா இல்லையா என்பது அவருக்கு மட்டுமே தெரியும். எங்களுக்கு எதுவும் தெரியாது. அவர் சிக்ஸர்களை அடித்து ஆட்டங்களை முடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்.
பேட்டிங் பயிற்சியாளராக எனது பார்வையில், அவர் இன்னும் நன்றாக பேட்டிங் செய்கிறார். அவர் இன்னும் பயிற்சிக்கு வருவதற்கும், தனது விளையாட்டில் பணியாற்றுவதற்கும் உந்துதலாக இருக்கிறார். அவர் பந்தை நன்றாக அடிக்கிறார். அவர் இன்னிங்ஸை ஒளிரச் செய்வதையும், விஷயங்களை நன்றாக முடிப்பதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.
அந்த சிக்ஸர் அடிக்கும் திறமை இன்னும் அவருக்கு இருக்கிறது. எனவே, அவர் அதை ரசித்து, இன்னும் அணியில் பங்களித்துக் கொண்டிருக்கும் போதே, அவரால் தொடர முடியாததற்கு எந்தக் காரணமும் இல்லை. அவரால் இன்னும் 5 வருடங்களுக்கு கூட விளையாட முடியும் (சிரிக்கிறார்). அது பற்றி எங்களுக்குத் தெரியாது. அனைத்தும் எம்.எஸ். பொறுத்த வரை தான் இருக்கும் என்று ”என்று அவர் கூறினார்.
இந்த சீசனில் இதுவரையான தோனியின் பேட்டிங்கில் ஹஸ்ஸி திருப்தி அடைந்துள்ளதாகவும், அவரால் சிறப்பாக விளையாட முடிகிறது, ஃபினிஷராக இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். நடப்பு சீசனில் தோனி இதுவரை 49 சராசரியுடன் 98 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.