ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ரன்கள் எடுத்தும் தோல்வியை தழுவிய நிலையில், கேப்டன் தோனி தோல்வி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி தனது 9-வது லீக் ஆட்டத்தில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 201 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஆட்டத்தில் கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 2-வது இன்னிங்ஸில் சென்னை அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் படு மோசமாக இருந்தது. குறிப்பாக சென்னை அணியின் சுழந்பந்துவீச்சானர் தீக்ஷனா பீல்டிங்கின்போது பல பந்துகளை கோட்டைவிட்டார். இதன் காரணமாக சென்னை அணி தோல்வியை தழுவியது. மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
தோல்வி குறித்து கேப்டன் தோனி கூறுகையில், ஆட்டத்தின் நடுபகுதியை நாங்கள் தவறவிட்டுவிட்டோம் என்று நினைக்கிறேன். முதலில் பந்தை எப்படி வீச வேண்டும். பேட்ஸ்மேன் அதை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதை புரிந்துகொண்டு நாங்கள் தெளிவாக செயல்பட்டிருக்க வேண்டும். அதேபோல் பேட்டிங்கிலும் கூடுதலாக 10-15 ரன்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும்.
எங்களுடைய பந்துவீச்சாளர்கள் அனுபவம் இல்லாதவர்கள் அதனால் பேட்டிங்கின் மூலம் தான் நாங்கள் இதை சமன் செய்ய முடியும். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த ஆடுகளம் மெதுவாக பந்துவீசும்போது சற்று கை கொடுத்தது. 200 ரன்கள் என்பது சராசரியான ஸ்கோர்தான் என்றாலும் கூட கடைசி 2 ஓவர்களில் நாங்கள் மோசமாக பந்துவீசிவிட்டோம். பதிரானா எப்போதும்போல் சிறப்பாக செயல்பட்டார். அவரை தவிர மற்றவர்கள் கொஞ்சம் தவறு செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.
நாங்கள் பந்துவீச்சு மற்றும் இந்த ஆட்டத்தில் என்ன தவறு செய்துவிட்டோம் என்பதை யோசிக்க வேண்டும் என்று தோனி குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கேப்டன் தோனி மறைமுகமாக ஆல்ரவுண்டர் ஜடேஜாவை தான் குறிப்பிட்டு சொல்கிறார் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா பேட்டிங்கில் 92 ரன்களும், பந்துவீச்சில் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ‘
பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வரும் ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று சென்னை ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil