IPL 2023, DC vs CSK Tamil News: கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 16வது ஐ.பி.எல் டி20 தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரில் இதுவரை 65 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை நாளை டெல்லியில் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் சென்னை களம் இறங்குகிறது.
இந்த ஆட்டத்தில் சென்னை அணி வென்று பிளே-ஆஃப் இடத்தை உறுதிசெய்தாலும், அவர்கள் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தைப் பெறுவார்களா அல்லது 3 வது இடத்தைப் பெறுவார்களா என்பது, கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் முடிவைப் பொறுத்தே இருக்கும். தற்போது சென்னை அணியின் நெட் ரன்ரேட் +0.381 லக்னோவின் +0.304 நெட் ரன்ரேட் விட சிறப்பாக உள்ளது

டெல்லி மைதானம் சி.எஸ்.கே-வுக்கு சாதகம்
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியம் (முன்பு ஃபெரோஸ் ஷா கோட்லா) ஆடுகளம் பொதுவாக மெதுவான ஒன்றாகும். அதாவது, ஆடுகளத்தின் மேற்பரப்பில் வறண்ட தன்மை இருப்பதால், ஆடுகளம் மெதுவாக இருக்கிறது. அது சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த உதவும். இந்த சீசனில் இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 160 ஆக இருந்தது. சில சமயங்களில் ஆடுகளம் சவாலாக இருக்கும்.

போட்டி மாலையில் தொடங்குவதால், 2வது இன்னிங்சின் போது ஆடுகளம் மெதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனவே, டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங் செய்ய நினைக்கும். ஆரம்பத்திலேயே பேட்டிங் நிலைமையை அதிகம் பயன்படுத்த வேண்டும். ஆட்டத்தின் பிற்பகுதியில் ஆடுகளம் மெதுவாக இருப்பதால் சேஸிங் கடினமாக இருக்கலாம். அதனால், சென்னையின் கேப்டன் எம்.எஸ் தோனி அதற்கேற்ப திட்டங்களை வகுப்பார் என எதிர்பார்க்கலாம்.
டெல்லியில் சென்னை எப்படி?

சென்னை அணி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 7 முறையும் வெற்றியும், 3 முறையும் தோல்வியும் கண்டுள்ளது.
DC vs CSK – நேருக்கு நேர்
டெல்லி கேபிடல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சென்னை அணி 18-ல் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி 10-ல் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil