IPL 2023, Chennai Super Kings playing 11 Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் திருவிழா வருகிற 31-ந் தேதி முதல் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரில் 10 அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அகமதாபாத் மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடரில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வாகைசூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் களமாடவுள்ளது. இதனால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
கடந்த சீசனில் ஆல்-ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா தலைமையில் சென்னை அணி களமாடியது. முதல் பகுதியில் அணியை அவர் வழிநடத்த திணறினார். அவரது தலைமையிலான அணி 8 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், அணியின் நீண்ட கால கேப்டனான எம்.எஸ் தோனியே மீண்டும் வழிநடத்தினார். எனினும், சென்னை அணியால் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வர முடியவில்லை. விளையாடிய 14 லீக் ஆட்டங்களில் 4 வெற்றிகள், 10 தோல்விகள் என தொடரின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் 9 வது இடத்தைப் பிடித்தது.
இப்படியொரு மறக்க முடியாத சீசனில் இருந்து சென்னை அணி மீண்டு வர, தோனி தலைமையில் ஆயத்தமாகி வருகிறது. இதையொட்டி, கடந்த இறுதியில் கேரளாவின் கொச்சியில் நடந்த மினி ஏலத்தில் சென்னை அணி புதிய சீசனுக்காக 7 வீரர்களை ஒப்பந்தம் செய்தது. அதில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய்க்கு சென்னை அணி கைப்பற்றியது. மேலும், நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கைல் ஜேமிசன் மற்றும் முன்னாள் இந்திய துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஆகியோரையும் சென்னை அணி வாங்கியது.
இருப்பினும், இந்த வீரர்களில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கைல் ஜேமிசன் காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து விலகியுள்ளார். எனினும், அவரது இடத்தை நிரப்ப சென்னை அணி தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் சிசண்டா மகலாவை அவரது அடிப்படை விளையான 20 லட்சத்திற்கு வசப்படுத்தி இருக்கிறது. முன்னதாக ஐபிஎல் 2023 ஏலத்தில் மகலா விற்கப்படாமல் போயிருந்தார்.
இதேபோல், சென்னைக்கு அடித்த பின்னடைவாக வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரியின் காயம் பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் சென்னை அணிக்காக சிறப்பாக பந்துகளை வீசியிருந்த அவர், அணியில் அதிக விக்கெட் வீழ்த்தியராவாக இருந்தார். தற்போது அவர் பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். தவிர, தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சிவம் துபே ஆகியோர் ஐபிஎல் 2023 தொடங்குவதற்கு முன்பு தங்களின் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டெவோன் கான்வே சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட்டின் விருப்பமான தொடக்க ஜோடியாக மாறியுள்ளார். சென்னை அணியினர் அவர்களின் நட்சத்திரங்கள் நிறைந்த பேட்டிங் வரிசையில் ஸ்டோக்ஸை எங்கு விளையாட முடிவு செய்கிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். முன்னாள் ராஜஸ்தான் ராயல்ஸ் நட்சத்திர வீரரான ஸ்டோக்ஸ் கடந்த 2020 சீசனில் தொடக்க ஆட்டக்காரராக சதம் அடித்து மிரட்டி இருந்தார். அவருடன் இங்கிலாந்தின் மொயீன் அலி மற்றொரு ஆல்ரவுண்டர் வீரராக உள்ளார்
இதேபோல், நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர், சென்னை அணியின் ஆடும் லெவன் அணியில் இடம்பிடிப்பதற்காக இலங்கையின் மகேஷ் தீக்ஷனாவுடன் போட்டியிடுகிறார். எவ்வாறாயினும், ஜடேஜாவே அணியின் சுழற்பந்து வீச்சு வரியையை வழிநடத்துவார். மறுபுறம், வேகப்பந்துவீச்சு வரிசையை தீபக் சாஹர் வழிநடத்துவார்.
ஐபிஎல் 2023க்கான சென்னை சூப்பர் கிங்ஸின் ஆடும் லெவன்:
டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ஷிவம் துபே, எம்எஸ் தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷனா அல்லது மிட்செல் சான்ட்னர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:
எம்.எஸ் தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மஹீஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, சிசண்டா மகலா, அஜய் மண்டல், பகத் வர்மா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.