IPL 2023 Eliminator MI vs LSG: Date, Time, Venue, Head-To-Head, Pitch Report, Probable Playing 11 Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. அடுத்ததாக பிளேஆஃப் சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில், வருகிற புதன்கிழமை (மே.24ம் தேதி) நடக்கும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.
நேருக்கு நேர்
ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இதுவரை 3 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த 3 போட்டிகளிலும் லக்னோ அணியே வென்றுள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமான லக்னோ அணி, மும்பைக்கு எதிராக அந்த ஆண்டில் 2 போட்டிகளிலும், இந்த ஆண்டில் ஒரு போட்டியிலும் விளையாடியுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்கள் மும்பையில் நடந்தாலும், மும்பை 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது. இரு அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.
பிட்ச் ரிப்போர்ட்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தின் ஆடுகளம் மந்தமானது. அதனால் சுழற்பந்துவீச்சுக்கு அதிகம் கை கொடுக்கும். இந்த சீசனில் 6 அணிகள் மொத்தம் 170 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை பதிவு செய்துள்ளன. இங்கு முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 163 ஆக உள்ளது. ஆனால், இரண்டாவது பேட் செய்த அணிகளை விட, முதலில் பேட் செய்யும் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. எனவே, இந்த ஆட்டத்தில் டாஸ் செல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்யலாம்.
லக்னோ – மும்பை அணிகள் சென்னை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தலா ஒரு முறை மோதியுள்ளன. அந்த ஆட்டங்களில் சென்னை அணியே வெற்றி பெற்றது.
மும்பை – லக்னோ அணிகள் எப்படி?

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அதிக முறை (5 முறை) சாம்பியன் பட்டம் வென்ற அணியாக வலம் வருகிறது. அந்த அணி இந்த சீசனுடன் சேர்த்து 10வது முறையாக பிளேஆஃப்-க்கு முன்னேறியுள்ளது. இந்த சீசனில் மும்பைக்கு தொடக்கத்தில் அடி சறுக்கினாலும், கடைசி போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். கேப்டன் ரோகித் சர்மா, கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹல் வதேரா போன்றோர் பேட்டிங்கில் வலு சேர்க்கிறார்கள். பந்துவீச்சில் பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால் மிரட்ட காத்திருக்கின்றனர்.

மறுபுறம், லக்னோ அணி நடப்பு சீசனில் தொடக்கம் முதல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த சீசனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். லக்னோ அணிக்கு தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை கொடுக்க தவறினாலும், அவர்கள் உறுதியான மிடில் ஆர்டரைக் கொண்டுள்ளனர். மேலும் வலுவான பந்துவீச்சு தாக்குதல், அவர்களுக்கு வெற்றிக்கு உதவுகிறது. பிட்ச் நிலை மற்றும் வரிசையின் அடிப்படையில் லக்னோ இந்தப் போட்டியில் வெற்றி பெறலாம்.
இரு அணிகளின் உத்தேச லெவன் வீரர்கள் பட்டியல்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
தீபக் ஹூடா, குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), பிரேராக் மன்காட், க்ருனால் பாண்டியா (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, நிக்கோலஸ் பூரன், கிருஷ்ணப்பா கௌதம், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக் மொஹ்சின் கான்
இம்பேக்ட் பிளேயர்: ப்ரேராக் மன்காட் அல்லது யாஷ் தாக்கூர்
மும்பை இந்தியன்ஸ்
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், நேஹால் வதேரா, டிம் டேவிட், கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்
இம்பேக்ட் பிளேயர்: சூர்யகுமார் யாதவ் அல்லது விஷ்ணு வினோத்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil