இந்த ஐ.பி.எல் சீசனின் இறுதிப்போட்டி நாளை (மே 28) நடைபெற உள்ள நிலையில், பரிசுத் தொகை விவரங்கள் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் 2023 சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாடிய நிலையில், சென்னை அணி குவாலிஃபயர் 1 போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. இதில் தோற்ற குஜராத் அணி, எலிமினேட்டரில் லக்னோ அணியை வீழ்த்திய மும்பை அணியை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இதையும் படியுங்கள்: சி.எஸ்.கே vs குஜராத் ஃபைனல்: அங்கே கில், ரஷித் கான்; இங்கே பதிலடி கொடுப்பது யார்?
பரபரப்பான இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த சென்னை – குஜராத் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்தநிலையில், இந்த சீசனுக்கான பரிசுத் தொகை விவரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 20 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 13 கோடியும் வழங்கப்படும். 3 ஆவது இடம் பிடித்த மும்பை அணிக்கு ரூ. 7 கோடியும், லக்னோ அணிக்கு ரூ. 6.5 கோடியும் வழங்கப்படும். இதன்மூலம் மொத்தம் ரூ.46.5 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.
இனிவரும் காலங்களில் பரிசுத் தொகை இதை விட அதிகமாக வழங்கப்படலாம் என பி.சி.சி.ஐ தரப்பில் கூறப்படுகிறது. 2008 இல் முதலிடம் பிடித்த அணிக்கு ரூ. 4.8 கோடியும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ரூ. 2.4 கோடியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்ச் கேப் வைத்திருக்கும் வீரருக்கு ரூ.15 லட்சமும், அதிக விக்கெட்கள் எடுத்து பர்பிள் கேப் வைத்திருக்கும் வீரருக்கு ரூ. 15 லட்சமும் வழங்கப்படுகிறது. வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு ரூ. 20 லட்சமும், மதிப்புமிக்க வீரர் விருதுக்கு ரூ. 12 லட்சமும் வழங்கப்படும். மேலும், சூப்பர் ஸ்டிரைக்கர் விருதுக்கு ரூ. 15 லட்சமும், கேம் சேஞ்சர் விருதுக்கு ரூ.12 லட்சமும் வழங்கப்பட உள்ளது.
எனவே நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சி.எஸ்.கே அணி வெற்றி பெற்றால் அந்த அணிக்கு ரூ. 20 கோடி கிடைக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil