Ambati Rayudu Tamil News: 16-வது ஐ.பி.எல் டி20 தொடர் இந்திய மண்ணில் பரபரப்பாக நடந்து முடிந்தது. இந்த தொடருக்கான இறுதிப்போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிலையில், இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்த இந்த ஆட்டத்தில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற சென்னை அணி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், சென்னை அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றிய பிறகு, கேப்டன் எம்.எஸ் தோனி தன்னையும் ஜடேஜாவையும் கோப்பை உயர்த்திப் பிடிக்க சொன்னதற்காக காரணத்தை அம்பதி ராயுடு நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக ராயுடு என்.டி.டி.வி-க்கு அளித்த பேட்டியில், “பரிசு வழங்கும் விழாவுக்கு முன், அவர் (எம்.எஸ் தோனி) என்னையும் ஜட்டுவையும் அழைத்து, கோப்பையை உயர்த்துவதில் அவருடன் நாங்களும் சேர வேண்டும் என்று விரும்புவதாக அவர் கூறினார். எங்கள் இருவருடனும் இதைச் செய்ய இது சரியான தருணம் என்றும் அவர் நினைத்தார். அவரின் இந்த செயல்பாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுபோன்று இதற்கு முன் நடந்ததாக நான் நினைக்கவில்லை. அப்படியான மனிதர் தான் அவர். அப்படித்தான் உலகம் முழுதும் அறியப்படுகிறார். மொத்தத்தில் இது அவருடைய செயல்பாடுகள் தான்" என்று கூறி நெகிழ்ந்தார்.
முன்னதாக, ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டி தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையிலும் கடைசிப் போட்டி என்று குறிப்பிட்ட ராயுடு இறுதிப்போட்டியுடன் ஐ.பி.எல் தொடரில் இருந்தும், இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
— ATR (@RayuduAmbati) May 30, 2023
"இது ஒரு சிறப்பு ஐபிஎல் வெற்றியில் உச்சக்கட்ட உணர்ச்சிகரமான இரவு. அந்த உயர் குறிப்பில், இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் எனது ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன். வீட்டில் டென்னிஸ் பந்துடன் விளையாடும் குழந்தையாக நான் கிரிக்கெட் மட்டையை எடுத்தபோது, மூன்று தசாப்தங்களாக தொடரும் அற்புதமான பயணத்தை நான் கற்பனை செய்யவில்லை, ”என்று ராயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.