IPL 2023 - Rinku Singh - Yashasvi Jaiswal - Harbhajan Singh Tamil News: இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுமான ஐ.பி.எல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 தொடர் கிரிக்கெட் வீரர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்த முக்கிய தளமாக இருந்து வருகிறது. இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டு தேசிய அணியில் இடம்பிடிக்க நுழைவுச் சீட்டாக இருக்கிறது. மேலும், மூத்த வீரர்கள் தங்களின் இடத்தை தொடர்ந்து தக்க வைக்கவும் உதவிகிறது.
ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பல வீரர்கள் தங்கள் நாட்டு தேசிய அணியில் இடம்பிடித்து தற்போது முன்னணி வீரர்களாக கலக்கி வருகின்றனர். அவ்வகையில், இந்திய வீரர்களில் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் குறிப்பிடத்தக்க வீரர்களாக உள்ளனர். கடந்த 2021 சீசனில் சிறப்பாக செயல்பட்ட முகமது சிராஜ் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பை பெற்றனர். கடந்த ஆண்டு சீசனில் இருந்து எக்ஸ்பிரஸ் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் இந்திய அணிக்கு தேர்வானார்.
அதிரடி காட்டும் ரிங்கு - யஷஸ்வி
நடப்பு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரிங்கு சிங் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஜெய்ஸ்வால் ஒரு தொடக்க ஆட்டக்காரராகவும், ரிங்கு சிங் ஒரு ஃபினிஷராகவும் உருவெடுத்துள்ளனர். பேட்டிங்கில் அவர்களின் அணுகுமுறை மற்றும் அதிரடியான ஆட்டம், அவர்களை சமகால வீரர்களை விட பல மைல்களுக்கு முன்னால் வைத்துள்ளது.
ரிங்கு சிங் 143 ஸ்டிரைக் ரேட்டில் 407 ரன்களை எடுத்துள்ளார். குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்க விட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார் ரிங்கு. அவர் கடந்த சீசனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதேபோல், இளம் வீரரான ஜெய்ஸ்வாலும் இந்த சீசனில் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வேகமான ஐபிஎல் அரைசதத்தை அடித்து அசத்தினார். மேலும், தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்து மிரட்டி இருந்தார்.
குரல் கொடுக்கும் ஹர்பஜன் சிங்
இந்நிலையில், ரிங்கு மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்
இதுகுறித்து ஹர்பஜன் சிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசுகையில், "யாராவது நன்றாக விளையாடும் போது அல்லது சிறப்பாக செயல்படும் போது, அவர்கள் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அவர்களை உடனடியாக பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் அவர்கள் அந்த சூழலில் இருந்தால், நிச்சயமாக எதையாவது கற்றுக்கொண்டு சிறப்பாக இருப்பார்கள்.
"ரிங்குவும் யஷஸ்வியும் இந்திய வீரர்களுடன் நெருங்கி இருப்பதற்கு இதுவே சரியான நேரம் என்று நான் உணர்கிறேன். அவர்களை 20 அல்லது 30 பேர் கொண்ட அணியின் ஒரு பகுதியாக ஆக்குங்கள். யஷஸ்வி மற்றும் ரிங்கு போன்ற திறமையாளர்களுக்கு, இது மிகவும் ஆரம்பமானது ஆனால் உண்மை சொல்ல வேண்டும், அது இல்லை. அவர்கள் ஏற்கனவே இந்த நிலையில் விளையாடி நன்றாக விளையாடுகிறார்கள். அவர்களுக்கு இப்போதே ஒரு வாய்ப்பு கொடுங்கள் இல்லையெனில் தாமதமாகலாம்." என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.