IPL 2023 Qualification Scenario: How Can Mumbai Indians Qualify For Playoffs Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில், நேற்று (செவ்வாய்கிழமை)இரவு 7:30 மணிக்கு லக்னோவில் நடந்த 63வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் லக்னோ அணி மும்பையை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த அசத்தல் வெற்றியின் லக்னோ அணி 15 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தோல்வி கண்ட மும்பை அணிக்கு பிளேஆஃப்-க்குள் நுழையும் வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் மும்பை வெற்றியை ருசித்திருந்தால், அவர்கள் 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி இருக்கலாம். ஆனால், ஒரு தோல்வி அவர்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. அதனால், மும்பையின் பிளேஆஃப் வாய்ப்பு இனி அவர்கள் கைகளில் இல்லை.
இந்நிலையில், நடப்பு சீசனில் மும்பை அணியன் பிளேஆஃப் தகுதி வாய்ப்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
மும்பை இதுவரை எத்தனை போட்டிகளில் விளையாடியுள்ளது? புள்ளிகள் அட்டவணையில் அவர்களின் நிலை என்ன?
மும்பை இந்தியன்ஸ் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 7ல் வெற்றியும், 6ல் தோல்வியும் கண்டுள்ளது. 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
எந்த அணிகளுக்கு எதிராக மும்பையின் போட்டி மீதமுள்ளது?
ஏற்கனவே பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக மும்பைக்கு ஒரு போட்டி உள்ளது.

பிளேஆஃப்-க்கு தகுதி பெற மும்பை என்ன செய்ய வேண்டும்?
மும்பையின் தலைவிதி இப்போது அவர்களின் கைகளில் இல்லை. ஆனால் முதல் நான்கு இடங்களுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதற்கு அவர்கள் ஐதராபாத் அணிக்கு எதிரான இறுதி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும்.
சென்னை மற்றும் லக்னோ அணிகள் தங்களின் கடைசி லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால், பெங்களூரு மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால், ஐதராபாத் அணிக்கு எதிராக வெற்றி பெற்றாலும், மும்பை அணியின் மோசமான நெட் ரன்ரேட்டால் வெளியேறும். பெங்களூரு அணி அவர்களின் கடைசி இரண்டு போட்டிகளை 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால், மும்பை ஐதராபாத் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். அப்படி செய்தல் பெங்களூரு அணியை விட சிறந்த நெட் ரன்ரேட்டை மும்பை பெறலாம்.
சென்னை, லக்னோ, பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெறவில்லை என்றால் மட்டுமே மும்பை அணி தகுதிபெற முடியும்.
மும்பை அணி ஐதராபாத் அணியிடம் தோற்றால், அவர்கள் 14 புள்ளிகளில் சிக்கிக் கொள்வார்கள். அதன்பின்னர் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இரண்டும் குறைந்தது ஒரு போட்டியில் தோல்வியடையும் என்று நம்ப வேண்டும். இந்த நிலையில், பெங்களூரு அவர்கள் ஒரு போட்டியில் பெரும் வித்தியாசத்தில் தோல்வியடையும் என்று நம்ப வேண்டும்.

மும்பை டாப் 2ல் இடம் பிடிக்குமா?
தற்போதைய நிலவரப்படி, இப்படியொரு நிகழ்வு நடக்க வாய்ப்புகள் குறைவாக தெரிகிறது. மற்ற அணிகளின் முடிவுகள் மும்பைக்கு சாதகமாக சென்றால், அவர்கள் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற முடியும். மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை தோற்கடித்தால் மற்றும் பின்வரும் நிகழ்வுகள் நடந்தால் அந்த அணி டாப் 2ல் இடம் பிடிக்கும்.
- சென்னை மற்றும் லக்னோ தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் தோற்க வேண்டும்.
- பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் குறைந்தது ஒரு ஆட்டத்தையாவது தோற்க வேண்டும்.
இப்படி நடந்தால், மும்பை 2வது இடத்திற்கு முன்னேறி, குவாலிஃபையர் 1ல் குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்ள முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil