IPL 2023 – SRH vs RCB Tamil News: இந்திய மண்ணில் நடைபெற்று வரும் 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கும் 65வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த அணிகளில் ஐதராபாத் அணியின் பிளேஆஃப் கனவு முடிவுக்கு வந்துள்ள நிலையில், பெங்களூரு அணி இன்னும் போட்டியில் நீடித்து வருகிறது.
நடப்பு சீசனில் குஜராத் அணியைத் தவிர மற்ற எந்த அணிகளும் பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்யவில்லை. 2வது இடத்தில் உள்ள சென்னை அணி டெல்லி உடனான கடைசி லீக் ஆட்டத்தில் வென்றால், 3வது இடத்தில் உள்ள லக்னோ கொல்கத்தா அணியை வீழ்த்தினால், இவ்விரு அணிகளும் தலா 17 புள்ளிகளுடன் முடிக்கும். இதன்மூலம், இரு அணிகளின் பிளேஆஃப் வாய்ப்பும் உறுதியாகி விடும். இதில் சிறப்பான நெட் ரன்ரேட்டை பெறும் அணி 2வது இடத்தை பிடிக்கும்.

இருப்பினும், சென்னை மற்றும் லக்னோ அணிகள் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றியை ருசிக்கும் முன்னேரே பிளேஆஃப்-க்கு தகுதி பெறும் மற்றொரு வாய்ப்பும் உள்ளது. அதாவது, பெங்களூரு – ஐதராபாத் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றால், சென்னை மற்றும் லக்னோ அணிகள் பிளேஆஃப்-க்கு தகுதி பெற்று விடும். இதேபோல், மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இனிப்பு செய்தியாக அமைந்து விடும்.

இதனால், ஐதராபாத் – பெங்களூரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு சீசனில் சொந்த மைதானத்தில் படுதோல்வியை சந்தித்து வரும் ஐதராபாத் அதிலிருந்து மீள வேண்டும் என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 2013 முதல் 2019 வரை பெங்களூருவுக்கு எதிராக ஐதராபாத் மண்ணில் நடந்த 7 ஆட்டங்களில் 6ல் ஐதராபாத் வெற்றி பெற்றுளளது. ஒரு ஆட்டத்தில் மட்டுமே பெங்களூரு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil