News about no ball, DRS WPL 2023 in tamil: டி20 லீக்கில் முதல் முறையாக வைடு மற்றும் நோ-பால் தொடர்பான தீர்ப்பில் ஆட்சேபனை இருந்தால் அதை எதிர்த்து டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய மண்ணில் நடைபெற்று வரும் மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் இது முதல் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்து நடக்கவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் 2023 (ஐபிஎல் 2023) தொடரிலும் இதைப் பின்பற்றப்பட உள்ளது.
டபிள்யூபிஎல் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் ஆட்டமிழக்க ஆன்-பீல்ட் முடிவுகளை ரிவியூ செய்வதற்கு வீரர்கள் இனி மட்டுப்படுத்தப்பட மாட்டார்கள். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் ஒவ்வொரு அணிக்கும் அனுமதிக்கப்படும் இரண்டு தோல்வியுற்ற ரிவியூகளைப் போல, வைடுகள் மற்றும் நோ-பால்களுக்கான ரிவியூகளை எடுக்கவும் வழங்கப்பட உள்ளது. இருப்பினும், இந்த டிஆர்எஸ்-யைக் கொண்டு, லெக்-பை முடிவுகளை ரிவியூ செய்ய பயன்படுத்த முடியாது.
இந்த புதிய அம்சத்தை நேற்றைய மகளிர் பிரிமீயர் லீக் போட்டியில் வீராங்கனைகள் பயன்படுத்தியதை பார்க்கமுடிந்தது. டெல்லி-பெங்களூரு இடையிலான ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஸ்கட் இடுப்பு உயரம் அளவுக்கு வீசிய பந்துக்கு டெல்லி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் டி.ஆர்.எஸ்.-ன்படி நோ-பால் கேட்டு அப்பீல் செய்தார். ரீப்ளேவுக்கு பிறகு அது நோ-பால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதே போல், நேற்று இரவு நடந்த யு.பி. வாரியர்ஸ்- குஜராத் இடையிலான ஆட்டத்தில் கடைசி ஓவரில் இரண்டு முறை வைடுக்கு டி.ஆர்.எஸ். கேட்கப்பட்டது.
ஐபிஎல் - நோ-பால் சர்ச்சை
கடந்த காலங்களில், ஐபிஎல்லில் நோ-பால் தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதில் குறிப்பிடும் படியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்எஸ் தோனி, 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியின் போது பென் ஸ்டோக்ஸின் அதிக ஃபுல் டாஸுக்கு பதிலளிக்கும் விதமாக டக்-அவுட்டிலிருந்து வெளியேறினார். மேலும், மைதானத்திற்குள் நுழைந்த அவர் களநடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதேபோல், கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான ஆட்டத்தில் கடைசி ஓவர் முடிவில் இதே போன்ற நிகழ்வுகள் நடந்தது. அப்போது, கேப்டன் ரிஷப் பண்ட் டக்-அவுட்டிலிருந்து வெளியேறி, களத்தில் இருந்த நடுவருடன் வாக்குவாதம் செய்தார். தற்போது, அதுபோன்ற அசாதாரண நிகழ்வுகளை தவிர்க்கவே ஐ.பி.எல் இதுபோன்ற அம்சத்தை அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.