IPL 2023 playoff equations Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் – நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த அணிகளில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
குஜராத் அணி பிளேஆஃப் தகுதி பெறுவது ஏறக்குறைய உறுதியாவிட்ட நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அந்த அணி முதல் அணியாக பிளேஆஃப்-க்குள் நுழைந்து விடும். மீதமுள்ள 2 போட்டிகளில் (சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) தோல்வியுற்றாலும் எந்த கவலையும் இல்லாமல். அந்த போட்டிகளிலும் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் நம்பர் ஒன் அணியாக இருக்கும்.
மும்பை பிளேஆஃப் வாய்ப்பு எப்படி?
நடப்பு சீசனில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 11 ஆட்டங்களில் 6ல் வெற்றி, 5ல் தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. நெட் ரன்-ரேட்டில் (-0.255) பின்தங்கி இருக்கும் அந்த அணி அடுத்த சுற்றுக்கு சிரமமின்றி தகுதி பெற, அடுத்து வரும் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத்) ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.
ஒருவேளை மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தினால், மற்ற 5 அணிகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கும். அவை எந்தெந்த அணிகளுக்கு என்று இங்கு பார்க்கலாம்.
எந்த அணிகளுக்கு தலைவலி
மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தினால், அந்த அணி 14 புள்ளிகள் பெற்று 3வது இடத்துக்கு முன்னேறி விடும். அதனால், 3வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் 4வது இடத்துக்கு நகர்ந்து விடும்.
தற்போது பட்டியலில் 5வது, 6வது மற்றும் 8வது இடங்களில் இருக்கும் லக்னோ, பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மீதமுள்ள 3 போட்டிகளிலும் கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழல் ஏற்படும். இதேபோல், பிளேஆஃப் போட்டியில் தொடர 9வது இடத்தில் உள்ள ஐதராபாத் அணியும் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். 7வது மற்றும் கடைசி இடத்தில் உள்ள கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் ஏற்கனவே பிளேஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்டன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil