IPL 2023 Playoff Qualification Scenario Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில், நேற்று (செவ்வாய்கிழமை)இரவு 7:30 மணிக்கு லக்னோவில் நடந்த 63வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் சிக்ஸர் மழை பொழிந்து அரைசதம் அடித்த மார்கஸ் ஸ்டோனிஸ் 89 ரன்களும் (47பந்துகளில் 4 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள்), கேப்டன் க்ருனால் பாண்டியா 49 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு லக்னோ அணி 177 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து 178 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய மும்பை அணிக்கு தொடக்க வீரர்களான இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடியில் ரவி பிஷ்னோய் சுழலில் சிக்கிய கேப்டன் ரோகித் 37 ரன்னில் அவுட் ஆனார். அரைசதம் அடித்த இஷான் கிஷன் 59 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த வீரர்களில் அதிகபட்சமாக டிம் டேவிட் 32 ரன்கள் எடுத்தார்.
மும்பையின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை சிறப்பாக வீசிய மொஹ்சின் கான் வெறும் 5 ரன்களை மட்டுமே விக்கெட்டுக் கொடுத்தார். களத்தில் போராடிய டிம் டேவிட் – கிரீன் ஜோடியின் போராட்டம் தோல்வியில் தான் முடிந்தது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு மும்பை அணியால் 172 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், லக்னோ அணி மும்பையை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த அசத்தல் வெற்றியின் லக்னோ அணி 15 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
மும்பை தோல்வி – சி.எஸ்.கே-வுக்கு லாபம்
லக்னோ அணிக்கு எதிராக மும்பை தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், அந்த அணி பிளேஆஃப்-க்கு முன்னேறும் வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் மும்பை வெற்றியை ருசித்திருந்தால், அவர்கள் புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி இருக்கலாம். ஆனால், ஒரு தோல்வி அவர்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. அதனால், மும்பையின் பிளேஆஃப் வாய்ப்பு இனி அவர்கள் கைகளில் இல்லை.

ஐதராபாத் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றாலும், தற்போது உள்ள மிகவும் மோசமான நெட் ரன்ரேட் (NRR) காரணமாக அவர்கள் பிளேஆஃப்-க்கு தகுதி பெறாமல் போகலாம். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) ஆகிய இரு அணிகளும் அவர்களின் மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றால், மும்பை அணி ஐதராபாத்தை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தினால் ஒழிய தகுதி பெற வாய்ப்பில்லை.
எவ்வாறாயினும், மும்பையின் தோல்வி பிளேஆஃப் பந்தயத்தில் உள்ள மற்ற அனைத்து அணிகளுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. குறிப்பாக, புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்கான போட்டியைப் பொறுத்தவரை, அது சென்னை அணியின் கட்டுப்பாட்டில் மீண்டும் வந்துள்ளது. வருகிற சனிக்கிழமையன்று டெல்லி கேப்பிடல்ஸுக்கு (DC) எதிரான ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றால் பிளேஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும்.

இதேபோல், மும்பையின் இந்த தோல்வி ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா போன்ற அணிகளுக்கு, இது ஒரு கிறிஸ்துமஸ் பரிசாக கிடைத்துள்ளது. அவர்கள் பிளேஆஃப்-க்கு 14 புள்ளிகளுடன் தகுதி பெறுவதற்கான வாய்ப்பையும் கொடுத்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் தங்கள் இறுதி ஆட்டங்களில் வென்று 14 புள்ளிகளைப் பெற்றால், மும்பை ஐதராபாத் அணியிடம் தோற்றால், இரு அணியும் பிளேஆஃப்-க்கு முன்னேறலாம். எனினும், அவர்களின் இடத்தை நெட் ரன்ரேட் தான் தீர்மானிக்கும்.
நல்ல நெட் ரன்ரேட் காரணமாக பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளும் பிளேஆஃப் வாய்ப்பில் நீடித்து வருகின்றனர். வருகிற ஞாயிறு அன்று நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை ஐதராபாத் அணியை தோற்கடித்தாலும், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மீதமுள்ள 2 போட்டியில் வென்றால் மும்பையை பின்னுக்கு தள்ளும். சென்னை மற்றும் லக்னோ அணிகள் கடைசி ஆட்டத்தில் தோற்றால், இருவரும் முதல் இரண்டு இடங்களுக்குள் வரும் வாய்ப்பும் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil