IPL 2023: Playoff scenario Explained in Tamil: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில், நேற்று (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு தர்மசாலாவில் நடந்த 63வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டெல்லி அணி பஞ்சாப் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
We can confirm that we have no fingernails left after that 𝐖 👍 pic.twitter.com/hJPhJG2l9B
— Delhi Capitals (@DelhiCapitals) May 17, 2023
பிளே ஆஃப்-க்கு முன்னேறிய குஜராத்
நடப்பு சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 18 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அந்த அணி முதல் அணியாக பிளே ஆஃப்-க்கு முன்னேறியுள்ள நிலையில், மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றியை ருசித்தால், நம்பர் ஒன் அணியாக லீக் சுற்றை முடிக்கும்.
பிளேஆஃப் சுற்றில் மீதமுள்ள 3 இடங்களுக்கு சென்னை, லக்னோ, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய 4 அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் இருந்த பஞ்சாப் அணி நேற்று டெல்லி எதிராக தோல்வி கண்ட நிலையில், அந்த அணிக்கு பிளேஆஃப் தகுதி பெறும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது.
பஞ்சாப் அணியின் கடைசி ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக நடக்கிறது. இதில், ராஜஸ்தான் அணியும் 12 புள்ளிகளில் உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணி 14 புள்ளிகளைப் பெறும். இது பிளேஆஃப்-க்கு நுழைய குறைந்தபட்ச வாய்ப்பை கொடுக்கும்.

பஞ்சாப் அணியை டெல்லியை வீழ்த்தியதால், 15 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளை பஞ்சாப் அணியால் இனி முந்த முடியாது. மீதமுள்ள ஒரு போட்டியில் வென்றால் கூட பஞ்சாப் அணி 14 புள்ளிகளுடன் மட்டுமே முடிக்க முடியும்.
சி.எஸ்.கே-வுக்கு வில்லன் ஆர்.சி.பி
புள்ளிகள் பட்டியலில் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய நான்கு அணிகள் 12 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. இதில், பெங்களூரு அணி மட்டுமே இரண்டு ஆட்டங்களை கையில் வைத்துள்ளது. அதாவது, இந்த 4 அணிகளில் பெங்களூரு அணி மட்டுமே லீக் சுற்றை 16 புள்ளிகளுடன் முடிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை, டெல்லி அணிக்கு எதிராக கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் தொடரை முடிக்கும். மேலும், மற்ற அணிகளின் முடிவுகளைப் பொருட்படுத்தாமல் அவர்கள் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் முடிப்பார்கள்.
டெல்லிக்கு எதிராக சென்னை வெற்றி பெற்றால், ஐதராபாத் அணிக்கு எதிராக மும்பை வெற்றி பெற்றாலும் சென்னை அணியை மும்பை முந்த முடியாது. இதேபோல், லக்னோ அணி கொல்கத்தாவுக்கு எதிராக வெற்றி பெற்றாலும், சென்னையுடன் சமமான புள்ளிகளை பகிரும். பெரிய நெட் ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே லக்னோ சென்னையை முந்த வாய்ப்புள்ளது.

சென்னை டெல்லியிடம் தோற்றால், அவர்கள் 15 புள்ளிகளுடன் தொடரை முடிப்பார்கள். ஐதராபாத்தை மும்பை வெற்றி பெற்றால், அந்த அணி சென்னையை முந்தும். மற்றும் லக்னோ கொல்கத்தாவை வீழ்த்தினால், அந்த அணி சென்னையை முந்தி டாப் 2ல் இடம் பிடிக்கும்.
இதேபோல் பெங்களூரு, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய 4 அணிகளில் இன்னும் 2 போட்டிகளை கைவசம் வைத்துள்ள பெங்களூரு அணி சென்னையை முந்தும் வாய்ப்புள்ளது. சென்னை டெல்லியிடம் தோற்றால் 15 புள்ளிகளுடன் இருக்கும். அதே நேரத்தில், பெங்களூரு மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் (குஜராத், ஐதராபாத்) வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் முடிக்கும். அதன் மூலம் சென்னையை பெங்களூரு அணி முந்தும். அதனால், சென்னை முக்கிய போட்டியாளராக பெங்களூரு உருவெடுத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்பெற https://t.me/ietamil