IPL 2023 playoff qualification scenarios explained in tamil: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில் நேற்று (ஞாயிற்று கிழமை) 2 லீக் போட்டிகள் நடந்தன. இதில், மாலை 3:30 ஜெய்ப்பூரில் நடந்த 60வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 61-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை கொல்கத்தா வீழ்த்தியது. இந்த இரண்டு ஆட்டங்களின் முடிவுகள் அடுத்த சுற்றான பிளேஆஃப்-க்கு தகுதி பெறும் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டியை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. அதுதொடர்பாக இங்கு பார்க்கலாம்.

குஜராத் டைட்டன்ஸ் பிளேஆஃப்-க்கு எப்படி தகுதி பெற முடியும்?
நடப்பு சீசனில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 8 வெற்றி, 4 தோல்விகளுடன் 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறது. அந்த அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறத் தவறினாலும், மற்ற போட்டிகளின் முடிவுகள் (சென்னை மற்றும், மும்பை தோற்றால்) அவர்களுக்குச் சாதகமாக இருந்தால், அவர்களால் இன்னும் தகுதி பெற முடியும்.
குஜராத் அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் நிச்சயமாக முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும். மேலும் குவாலிஃபையர் 1ல் விளையாடும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப்-க்கு எப்படி தகுதி பெறலாம்?
குஜராத் அணியுடன் பிளேஆஃப்-க்கு தகுதிபெற மிகவும் சாதகமான வாய்ப்புகளைக் கொண்ட மற்றொரு அணியாக சென்னை உள்ளது. அந்த அணி 13 போட்டிகளில் 7ல் வெற்றி 5ல் தோல்வி, ஒரு முடிவு இல்லை என 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. சென்னை அணி கொல்கத்தாவுக்கு எதிரான அதன் 13வது லீக் ஆட்டத்தில் தோல்வியைக் கண்ட நிலையில், அடுத்ததாக டெல்லிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெறுவது அவசியமாகும்.

இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் பிளேஆஃப்-க்கு முன்னேறும் வாய்ப்பு உறுதியாகிவிடும். ஆனால், டாப் 2ல் இடம் பிடிக்கும் வாய்ப்பைப் பொறுத்தவரை, மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளின் முடிவுகளைப் பொறுத்தே இருக்கும்.
மும்பை இந்தியன்ஸ் பிளேஆஃப் வாய்ப்பு எப்படி?
புள்ளிகள் பட்டியலில் 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் நடப்பு சீசனில் பிளேஆஃப்-க்கு தகுதி பெற அவர்களின் கடைசி இரண்டு போட்டிகளில் ஒன்றில் கட்டாய வெற்றி தேவை. ஆனாலும், மற்ற அணிகளின் முடிவுகள் அவர்களுக்குச் சாதகமாக அமைய வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட்ரன் ரேட் (-0.117) குறைவாக இருப்பது அவர்களுக்கு பெரும் கவலையாக இருக்கும்.
இருப்பினும், மும்பை அணி மீதமுள்ள 2 போட்டியிலும் வெற்றி பெற்றால், அவர்கள் குவாலிஃபையர் 1ல் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.
லக்னோவின் பிளேஆஃப் வாய்ப்பு எப்படி?
நடப்பு சீசனில் பிளேஆஃப்-க்கு முன்னேற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்கள் தகுதி பெற மற்ற அணிகளின் முடிவுகளை சார்ந்து இருக்க வேண்டும்.
லக்னோ அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 13 புள்ளிகளுடனும், +0.309 நெட்ரன் ரேட்டுடனும் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளனர்.
ஆர்.சி.பி பிளேஆஃப்-க்கு எவ்வாறு தகுதி பெற முடியும்?
12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ராஜஸ்தான் அணிக்கு எதிரான அதன் 12வது லீக் ஆட்டத்தில் அபார வெற்றியை ருசித்துள்ளது. அதனால் அந்த அணியின் நெட்ரன் ரேட் +0.166 ஆக உயர்ந்துள்ளது. எனினும், பிளேஆஃப்-க்கு தகுதி பெற அந்த அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
இந்த 2 போட்டிகளில் ஒன்றில் தோல்வி கண்டால் கூட, பெங்களூரு அணி மற்ற அணிகளின் முடிவுகளை சார்ந்து இருக்க வேண்டும். மற்ற அணிகள் அதே புள்ளிகளுடன் முடிவடைந்தால் நெட்ரன் ரேட் முக்கிய பங்கு வகிக்கும்.
பிளேஆஃப்-க்கு ராஜஸ்தான் எவ்வாறு தகுதி பெற முடியும்?
12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விதி இனி அவர்கள் கைகளில் இல்லை. இருப்பினும், அவர்கள் பிளேஆஃப்-க்கு தகுதி பெறுவதற்கான கணித அடிப்படையிலான வாய்ப்பு இன்னும் உள்ளது. இது மற்ற அணிகளின் மற்ற முடிவுகள் மற்றும் நெட் ரன்ரேட்டைப் பொறுத்தே அமையும்.
மீதமுள்ள ஒரு போட்டியில் ராஜஸ்தா அணி தோற்றால், அவர்கள் வெளியேறி விடுவார்கள். ஆனால் அவர்கள் வெற்றி பெற்றால், மும்பை, லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் தங்களின் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும். மேலும், நெட் ரன்ரேட்டை பொறுத்து ராஜஸ்தான் அணிக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பஞ்சாப் அணியின் பிளேஆஃப் வாய்ப்பு எப்படி?
12 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிளேஆஃப் வாய்ப்பு அவர்களின் பக்கத்தில் இல்லை என்றாலும், அவர்கள் மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் நம்பமுடியாத அளவில் வெற்றி பெற வேண்டும்
பஞ்சாப் அணியின் இரண்டு வெற்றிகள் அவர்களை 16 புள்ளிகளுக்கு கொண்டு செல்லும். ஆனால் அவர்கள் எப்படியும் மற்ற அணிகளின் முடிவை சார்ந்து இருக்க வேண்டும்.
டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் அணிகளின் பிளேஆஃப் வாய்ப்புகள் எப்படி?
டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பொறுத்தவரை, அந்த அணி அதிகாரபூர்வமாக நடப்பு சீசனில் இருந்து வெளியேறி விட்டது. மீதமுள்ள 2 போட்டிகளில் அந்த அணி ஆறுதல் வெற்றியுடன் விடைபெற நினைக்கும். இதேநிலையில் தான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும் உள்ளன.
இந்த அணிகள் பிளேஆஃப்களுக்கு தகுதி பெறவில்லை என்றாலும், மற்ற முன்னணி அணிகள் பிளேஆஃப்க்கு தகுதி பெறுவதற்கு முட்டுக்கட்டை போட முடியும். ஐதராபாத் அணி அதன் மீதமுள்ள 3 போட்டிகளில் குஜராத், பெங்களூரு மற்றும் மும்பை அணிகளை எதிர்கொள்கிறது. டெல்லி அணி மீதமுள்ள 2 போட்டிகளில் பஞ்சாப் மற்றும் சென்னையுடன் மோதுகிறது. கொல்கத்தா அணி மீதமுள்ள ஒரு போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil