IPL 2023 playoffs CSK Chances Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில், அடுத்த சுற்றான பிளேஆஃப் அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது. இதில் குவாலிபையர் -1 மே 23-ஆம் தேதியும், எலிமினேட்டர் போட்டி மறுநாள் மே 24-ஆம் தேதியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் குவாலிபையர் -2 மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன.
குஜராத் தகுதி

இந்நிலையில், நேற்று (திங்கள்கிழமை) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 62வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், நடப்பு சீசனில் முதல் அணியாக பிளேஆஃப்-க்கு தகுதி பெற்றது. மேலும் இந்த வெற்றியின் மூலம் லீக் சுற்றின் முடிவில் குஜராத் முதல் இரண்டு இடங்களுக்குள் நீடிக்கும் என்பதையும் உறுதி செய்துள்ளது.
சி.எஸ்.கே வாய்ப்பு எப்படி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது 13 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. சென்னை அணி தனது கடைசி ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிகொள்கிறது. இப்போட்டியானது வருகிற சனிக்கிழமை (மே.20) மாலை 3:30 மணிக்கு டெல்லியில் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றியைப் பதிவு செய்தால் 17 புள்ளிகளைப் பெறும். அதன் மூலம் சென்னை அணி லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களுக்குள் நீடிக்கும்.
இந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வியுற்றாலும், மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்து அவர்கள் இன்னும் தகுதி பெறலாம். அவ்வகையில், இன்று லக்னோவில் நடக்கும் 63வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி சென்னையை பின்னுக்கு தள்ளி 2வது இடத்துக்கு முன்னேறும்.

சென்னை அணி பாதுகாப்பாக பிளேஆஃப்-க்கு முன்னேற பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் தோற்க வேண்டும். அல்லது, மும்பை – லக்னோ அணிகள் மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் கண்டிப்பாக தோல்வியுற வேண்டும். அதாவது இன்று நடக்கும் ஆட்டத்தில் லக்னோ வென்றால், வருகிற ஞாயிற்றுகிழமை மும்பையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர்கொள்ளும் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற வேண்டும். மும்பை – லக்னோ அணிகளின் தலா ஒரு தோல்வி சென்னை கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil