IPL 2023 Points Table Analysis before Clash between MI vs RCB Tamil News: இந்திய மண்ணில் நடந்து 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் அரங்கேறி வருகிறது. இத்தொடர் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த சுற்றான பிளே ஆஃப்-க்கு முன்னேற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றன.
இந்த தொடரில் நடப்பு சாம்பியயான குஜராத் டைடன்ஸ் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி இதுவரை விளையாடி 11 போட்டிகளில் 8ல் வெற்றி, 3ல் மட்டும் தோல்விகளை பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 11 ஆட்டங்களில் 6ல் வெற்றி, 4ல் தோல்வி, ஒரு ஆட்டத்திற்கு முடிவு இல்லை என 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
இந்த இரு அணிகளில் குஜராத் பிளே ஆஃப்-க்கு தகுதி பெறுவது ஓரளவிற்கு உறுதியாகிவிட்டது. இதேபோல் சென்னை அணியும் அடுத்து மோதவுள்ள 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றால் பிளே ஆஃப்-க்கு தகுதி பெற்று விடும். புள்ளிப்பட்டியலில் தற்போது 13 புள்ளிகளுடன் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மீதமுள்ள 3 போட்டியில் 2ல் வென்றால், அந்த அணியும் பிளேஆஃப்-க்கு முன்னேறி விடும்.
10 புள்ளிகளுடன் 5 அணிகள்
புள்ளிகள் பட்டியலில் லக்னோ அணிக்கு அடுத்தபடியாக 10 புள்ளிகளுடன் ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய 5 அணிகள் உள்ளன. இந்த அணிகளில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மட்டும்தான் 10 போட்டிகளில் விளையாடிய அணிகளாக உள்ளன. மற்ற 3 அணிகள் 11 போட்டிகளில் விளையாடி விட்டன.
பெரிய போட்டி
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் மும்பையில் நடக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றியை ருசிக்கும் அணி 11 போட்டிகளில் 12 புள்ளிகளை பெற்றுவிடும். மேலும், அந்த அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் லக்னோவை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்துக்கு முன்னேறி விடும்.
ஒருவேளை, இன்றைய ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டு போட்டி ரத்தாகும் பட்சத்தில், லக்னோ அணியே தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கும். எனவே, மும்பை – பெங்களூரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி – ஐதராபாத் நிலை என்ன?
புள்ளிகள் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் 10 போட்டிகளில் 4 வெற்றியைப் பெற்றுள்ளன. இந்த அணிகள் எதிர்வரும் 4 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஒரு போட்டியில் தோல்வியை தழுவினாலும் கூட, பிளே ஆஃப் கனவு சுக்குநூறாகிவிடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil