IPL 2023 Playoff Qualification Scenario EXPLAINED in Tamil: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில், ஐதராபாத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 7:30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த அபார வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 14 புள்ளிகளை பெற்றுள்ளது. மேலும், புள்ளிகள் பட்டியலில் மும்பையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஆர்.சி.பி ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி?
ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி நடப்பு சீசனில் பிளேஆஃப்-க்கு செல்லும் முக்கிய போட்டியாளர் அணியாக உருவாகியுள்ளது. அந்த அணி ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் பிளேஆஃப் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பெங்களூரு அணி அதன் கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் தொடரை முடிக்கும். ஆனால், பிளேஆஃப்-க்குள் நுழையுமா என்றால், அதற்கு சென்னை, லக்னோ மற்றும் மும்பை அணிகளில் ஏதேனும் ஒரு அணி தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் தோற்க வேண்டும். அல்லது மும்பை அணியை விட சிறந்த நெட் ரன் ரேட்டுடன் (NRR) பெங்களூரு அணி குஜராத்தை வீழ்த்த வேண்டும்.
குஜராத்-க்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி தோற்றால், மும்பை - ஐதராபாத் அணிகள் மோதும் ஆட்டத்தில் மும்பை தோற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மும்பை அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால், அந்த அணி பிளேஆஃப்-க்கு தகுதி பெறும். மேலும், தற்போது 12 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் போன்ற அணிகளையும் நாக் அவுட் செய்யும்.
ஆனால், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் வெற்றி பெற்றால், 14 புள்ளிகளுடன் உள்ள அணிகள் சமநிலையில் இருக்கும். அப்போது நெட் ரன் ரேட் முக்கிய பங்கு வகிக்கும். இந்த டையில் முடிவடையக்கூடிய 5 அணிகளில், பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் சிறந்த நெட் ரன் ரேட்டைக் கொண்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.