IPL 2023 - MS Dhoni - Ravindra Jadeja Tamil News: 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் முதலாவது தகுதி சுற்றில் (குவாலிஃபயர் -1 ) நடப்பு சாம்பியயான குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 முறை சாம்பியயான சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இந்த நிலையில், தோனி - ஜடேஜா ஆகிய இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவுவதாகவும், அவர்களுக்கிடையே மைதானத்தில் நிகழ்ந்த வாக்குவாதத்தை தொடர்ந்து ஜடேஜாவின் சமீபத்திய ட்வீட் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விலகல்
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, நீண்டகாலமாக கேப்டன் பதவியில் இருந்த எம்.எஸ் தோனி தனது கேப்டன் பதவியில் இருந்து விலகி, ஜடேஜாவுக்கு அந்த பதவியை கொடுத்தார். கேப்டனாக செயல்பட்ட ஜடேஜா, பதற்றம் காரணமாக பேட்டிங், பந்துவீச்சு, கேப்டன்சி என அனைத்திலுமே சொதப்பினார். அதனால், மீண்டும் தோனியே கேப்டன் பொறுப்பை ஏற்கும் சூழல் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தால் அதிருப்தியடைந்த ஜடேஜா அணியில் இருந்து விலகி, ஓய்வுக்கு சென்றார். அடுத்து, சிஎஸ்கே தொடர்பான சமூகவலைதள பதிவுகளை தனது கணக்கில் இருந்து நீக்கினார். இதனிடையே, சி.எஸ்.கே அணி நிர்வாகம், ஜடேஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது. ஜடேஜாவும் நடப்பு சீசனில் சிறப்பாக செய்பட்டு வருகிறார். லீக் சுற்றில் 14 போட்டிகளிலும் விளையாடிய அவர் 17 விக்கெட்டுகள் மற்றும் 153 ரன்கள் எடுத்துள்ளார்.
செயல்
இந்நிலையில், சென்னை அணியின் கடைசி லீக் போட்டியில் டெல்லிக்கு எதிராக 223 ரன்களை எடுத்தபோது, ரவீந்திர ஜடேஜா வெறும் 7 பந்துகளில் 20 ரன்களை எடுத்து அசத்தினார். எனினும், ஆல்ரவுண்டர் வீரரான அவர் பேட்டிங்கில் பெரும்பாலும் சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். பந்துவீச்சில் முக்கிய கட்டத்தில் விக்கெட் வீழ்த்த தவறும் அவர் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து விடுகிறார். டெல்லிக்கு எதிராக அவர் 20 ரன்களை அதிரடியாக எடுத்து இருந்தாலும், பந்துவீச்சில் 4 ஓவர்களில் 50 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
குறிப்பாக, ஜடேஜாவின் பந்தில் டெல்லி கேப்டன் வார்னர் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். இது கேப்டன் தோனியை நிச்சயம் அதிருப்தியடைய செய்திருக்கும். அதனால்தான் போட்டி முடிந்தப் பிறகு ஜடேஜாவிடம் பேசிய தோனி, ''விருப்பம் இல்லையென்றால், அணியை விட்டு விலகிவிடு.'' எனக் கூறியதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சீசனில் நடந்த லீக் போட்டிகளின் போது, ஜடேஜா சீக்கிரம் அவுட் ஆகினால் தோனி என்ட்ரி கொடுப்பார் என்பதற்காக, ரசிகர்கள் தான் விளையாடும் போது சீக்கிரம் அவுட் ஆக வேண்டும் என பிராத்தனை செய்வதாகவும், அப்போது 'தோனி, தோனி' என ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்புவது தன்னை புண்படுத்தி விட்டன என்றும் ஜடேஜா அணி நிர்வாகத்திடம் கூறி இருக்கிறார். ஆனால் அதனையும் அணி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.
விமர்சனம்
இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டி முடிந்தப் பிறகு பேசிய தோனி, ''தனிப்பட்ட ரெக்கார்ட்டுக்கு விளையாடும் வீரர்கள் அணிக்கு தேவையில்லை. இந்த அணிக்காக ஆடும் வீரர்கள் மட்டும்தான் தேவை. '' என அதிரடியாக பேசியிருந்தார். இதன் மூலம் ஜடேஜாவை தோனி குத்திக்காட்டிதான் பேசியிருக்கிறார் என கருதப்படுகிறது.
பரபரப்பு ட்வீட்
இந்த நிலையில் தான், ஜடேஜா தனது ட்விடட்டர் பதிவில், 'இப்போதோ அல்லது எதிர்காலத்திலோ கர்மா நிச்சயம் திருப்பித் தரும்' என்று பதிவிட்டுள்ளார். ஜடேஜாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் தோனியைக் குறிப்பிட்டு தான் இப்படி பதிவிட்டுள்ளார் என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், தோனி அடிக்கடி குறிப்பிடும் 'Definitely' வார்த்தையை ஜடேஜா தனது கேப்சனில் குறிப்பிட்டுள்ளார் எனவும், அதனால் அவர் தோனியைத் தான் நிச்சயம் குறிப்பிடுகிறார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
இப்படியாக ஜடேஜா - தோனி இடையே மோதல் போக்கு பெரிய அளவில் வெடிக்க தொடங்கியுள்ள நிலையில், அடுத்த சீசனில் இருந்து ஜடேஜா சி.எஸ்.கே-வில் இருந்து விலக வாய்ப்பிருப்பதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இருப்பினும், முக்கிய போட்டிக்கு முன்னதாக ஜடேஜா - தோனிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதிலிருந்து மீள அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைக் காணவும் காத்திருக்கிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.