CSK vs GT IPL 2023 final was shifted to the reserve day (Monday) due to rain
CSK vs GT IPL 2023 Final Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடருக்கான இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு மோதுவதாக இருந்தது. ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக திடீரென மழை புகுந்து விளையாடியது. இடி, மின்னலுடன் விட்டுவிட்டு கொட்டித்தீர்த்த மழையால் மைதானத்தில் தண்ணீர் குளம்போல் காட்சியளித்தது.
Advertisment
தொடர்ந்து மழை நீடித்ததால் நேற்று போட்டி ஒத்தி வைக்கப்படுவதாகவும், மாற்றுநாளான இன்று (திங்கட்கிழமை, இரவு 7.30 மணி) இறுதிப்போட்டி நடக்கும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் நேற்றிரவு 11 மணிக்கு அறிவிக்கப்பட்டது.16 ஆண்டுகால ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இறுதிப்போட்டி மாற்றுநாளுக்கு தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இன்று மழையின் குறுக்கீடு இல்லாவிட்டால், 20 ஓவர்கள் கொண்ட முழு போட்டியை ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.
இருப்பினும், இன்றைய போட்டியின் போதும் மழை பெய்தால், என்ன நடக்கும் என்று ரசிகர்கள் பரபரப்பாக சமூக வலைதளங்களில் விவாதித்து வருகிறார்கள். இன்று ஒருவேளை மழையின் குறுக்கீடு இருந்தாலும், முடிவுக்காக 11 மணி வரை காத்திருந்து, 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
ஆனால், மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தால், கோப்பை குஜராத் அணிக்கு வழங்கப்படும். ஏனென்றால், லீக் சுற்றுகள் முடியும் போது புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி 20 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தது. சென்னை அணி 17 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்தது. எனவே இன்றும் மழை இடைவிடாது தொடர்ந்து பெய்தால், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணிக்கே கோப்பை வழங்கப்படும்.
இதற்கிடையில், பிரபல கிரிக்கெட் வர்ணணையாளர் ஹர்ஷா போக்லே தனது ட்விட்டர் பக்கத்தில்," இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறும் என நம்புகிறேன். 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நிர்ணயிக்கப்பட்டு, விளையாட முடியாமல் போனால் சூப்பர் ஓவர் முறை இருக்கும். அதுவும் முடியாவிட்டால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும்." என்று பதிவிட்டு உள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil