Mitchell Marsh | IPL 2024 | Delhi Capitals: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடியவர் ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ்.
இந்நிலையில், மிட்செல் மார்ஷ் தொடை காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது விலகல் டெல்லி அணி பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மார்ஷ் தனது வலது தொடை காயம் காரணமாக கடந்த வாரம் ஆஸ்திரேலியா திரும்பினார். ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியாவின் கேப்டனாகப் பொறுப்பேற்கத் தயாராக இருந்த மார்ஷ், டெல்லி அணி நிர்வாகத்துடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து நாடு திரும்பினார்.
அவர் கடைசியாக ஏப்ரல் 3 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார். மேலும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான அடுத்தடுத்த போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை.
இந்த சீசனில் மார்ஷின் அதிகபட்ச ஸ்கோராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 23 ரன்கள் எடுத்தார். அந்தப் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலியா அணியின் டாப் வீரர்களில் ஒருவர். அவர் இந்த ஆண்டின் மிகச் சிறந்த ஆடவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கான ஆலன் பார்டர் பதக்கத்தைப் பெற்றார். ஜனவரி 2023 முதல், 32 வயதான அவர் 38 போட்டிகளில் 50.10 சராசரியுடன் 1,954 சர்வதேச ரன்களைக் குவித்துள்ளார், இதில் மூன்று சதங்கள் அடங்கும், மேலும் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“