கிரிக்கெட்டில் இருந்து தோனி எப்போது ஓய்வு பெறுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களிடம் இப்போது இருக்கும் மிகப் பெரிய கேள்வி எம்.எஸ்.தோனி எப்போது ஓய்வு பெறப் போகிறார் என்பதுதான். தங்கள் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான, உணர்ச்சிப்பூர்வமான தருணங்களை கொடுத்த தோனி இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவாரா என்று ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், ஐ.பி.எல் போட்டிகளில் தோனி தொடர்ந்து விளையாடி வருகிறார். தோனிக்காகவே ஐ.பி.எல் பார்ப்பவர்கள் ஏராளம். ஆனால் தோனிக்கு தற்போது வயது 42 ஆகிவிட்டது. இதனால் அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது முடியாத காரியம் ஆகும்.
ஏற்கனவே 2023 ஐ.பி.எல் சீசனோடு கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டு விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்காக மேலும் ஒரு சீசன் விளையாட முயற்சி செய்வேன் என்று தோனி கூறியது கிரிக்கெட் ரசிகர்களை சற்று ஆறுதல் அடைய வைத்தது.
இந்த நிலையில், தோனி 10 நாட்களில் வலைபயிற்சியை தொடங்குவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். "தோனி இப்போது நன்றாக இருக்கிறார். அவர் தொடர்ந்து ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார். பத்து நாட்களில் அவர் வலைப்பயிற்சியை தொடங்குவார்" என காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
மேலும், கிரிக்கெட்டில் தோனியின் கடைசி ஆண்டாக வருகின்ற ஆண்டு இருக்க முடியுமா என்பதை நாங்கள் கூற முடியாது. அவர் தான் முடிவு செய்வார் என்றும் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் முதல் வாரத்தில் சென்னை அணி வீரர்கள் பயிற்சியை தொடங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“