ஐ.பி.எல் போட்டியில் தோனியை அவுட் செய்த பின்னர் ஏன் கொண்டாடவில்லை என பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் விளக்கம் அளித்துள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் தர்மசாலாவில் இன்று (மே 5) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி, அவ்வப்போது விக்கெட்களை இழந்தாலும் ஜடேஜா, ருதுராஜ், மிட்சலின் சிறப்பான ஆட்டத்தால் 167 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணி சென்னையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 139 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது.
முன்னதாக இந்தப் போட்டியில் முன்னாள் கேப்டன் தோனி முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
சென்னை அணி விக்கெட்களை இழந்துக் கொண்டிருந்ததால், தோனி விரைவில் களத்திற்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தோனி வழக்கம் போல் 19 ஓவரில் தான் களத்திற்கு வந்தார். ஆனால் முதல் பந்திலே கோல்டன் டக் ஆகி வெளியேறினார். 19 ஆவது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் தன்னுடைய அபாரமான பந்துவீச்சால் தோனியை கிளீன் போல்ட் ஆக்கி வெளியேற்றினார். ஆனால் தோனி விக்கெட்டை வீழ்த்தியதை ஹர்ஷல் படேல் பெரிய அளவில் கொண்டாடவில்லை.
மேலும், இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் நான்கு ஓவர்கள் வீசி 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தநிலையில், தோனி விக்கெட்டை கொண்டாடாதது பற்றி போட்டி முடிந்த பிறகு ஹர்ஷல் படேலிடம் வர்ணனையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஹர்ஷல் படேல், ’நான் தோனி மீது பெரிய அளவில் மரியாதை வைத்திருப்பதால் அவரை ஆட்டம் இழந்தவுடன் கொண்டாடவில்லை’ என்று கூறினார். ஹர்ஷல் படேலின் இந்த பதிலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் தொடர்ந்து பேசிய ஹர்ஷல் படேல், ஆடுகளத்தை பார்த்து முதலில் நாங்கள் தவறாக கணித்து விட்டோம். இன்றைய ஆடுகளம் கொஞ்சம் காய்ந்த நிலையில் இருக்கிறது. ஆடுகளம் மிகவும் தோய்ந்த நிலையில் உள்ளது சில பந்துகள் ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. இதனால் பேட்ஸ்மேன்கள் கடுமையாக தடுமாறினார்கள். முதலில் யாக்கர் பந்துகளை வீச எனக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும் என்னுடைய பந்துவீச்சில் நான் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றேன். சரியான முறையில் பந்து வீச வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகின்றேன். எவ்வளவு அதிகமாக பந்து வீசுகிறோமோ? அவ்வளவு நாம் முன்னேற்றம் அடைய முடியும். இது தான் என்னுடைய தாரக மந்திரம். நான் இங்கு சிறப்பாக செயல்பட்டதற்கு காரணம் பயிற்சியின் போது நான் கடுமையாக உழைத்தேன். இதை சரியாக செய்தாலே நமக்கு வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“