Chennai Super Kings | Ms Dhoni | IPL 2024: 17வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியாகிய நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணி ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.பி.சி) அணியுடன் மல்லுக்கட்டுகிறது.
இந்நிலையில், 22 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் தொடக்க போட்டிக்கான டிக்கெட் விற்பனை 18ம் தேதி (நாளை) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சி.எஸ்.கே - ஆர்.பி.சி அணிகள் மோதும் தொடக்க போட்டிக்கான டிக்கெட்டை எப்படி, எங்கு பெறலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் பேடிஎம் மற்றும் இன்சைடர்.இன் (Paytm - Insider.in) ஆகிய தளங்கள் மூலம் காலை 9:30 மணி முதல் டிக்கெட்டுகளை வாங்கலாம். மேலும், அனைத்து ஸ்டாண்டுகளும் டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெற உள்ளது. கடந்த காலங்களில் ஒரு நபருக்கு 2 டிக்கெட் என நேரடியாக சென்று வாங்கும் நடைமுறை இருந்த நிலையில், தற்போது புதிய நடைமுறையை அறிமுக செய்துள்ளது சென்னை அணி நிர்வாகம்.
சேப்பாக்கம் மைதானத்தின் சி,டி மற்றும் இ லோயர் ஸ்டாண்ட் டிக்கெட்டின் விலை 1,700 ரூபாயாக இருக்கும். ஐ, ஜே, கே, சி, மற்றும் இ அப்பர் ஸ்டாண்ட் டிக்கெட்டின் விலை 4,000 ரூபாயாக இருக்கும். ஐ, ஜே, மற்றும் கே லோயர் ஸ்டாண்ட் டிக்கெட்டின் விலை 4,500 ரூபாய் ஆகும். அதே சமயம் மிகவும் விலை உயர்ந்த கே.எம்.கே டெரஸ் ஸ்டாண்ட்டில் ஒரு டிக்கெட் விலை 7,500 ரூபாய் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“