Chennai Super Kings | IPL 2024 | CSK vs RCB | Harsha Bhogle: 17வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியாகிய நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் எம்.எஸ் தோனி தலைமையிலான சி.எஸ்.கே - ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ஆர்.பி.சி அணிகள் மோத உள்ளன.
பின்னடைவு
இந்நிலையில், ஐ.பி.எல் தொடருக்கான 10 அணிகளும் தங்களது வீரர்களுடன் பயிற்சி அமர்வுகளை நடத்தி வருகின்றன. அவ்வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு சில வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலரும் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள்.
இந்நிலையில், நியூசிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டெவோன் கான்வே-வுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் வரவிருக்கும் இந்த சீசனின் (ஐ.பி.எல் 2024) முதல் பாதியில் இருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
சென்னை அணிக்காக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் உடன் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கான்வே சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க உதவியிருக்கிறார். இந்த ஜோடி 54.9 சராசரி மற்றும் 150.4 ஸ்டிரைக்கிங் ரேட்டுடன் வெறும் 22 இன்னிங்ஸ்களில் 1208 ரன்களை குவித்துள்ளனர்.
ஐ.பி.எல் 2022 சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிக்கு எதிராக 182 ரன்கள் எடுத்ததன் மூலம், சென்னை அணிக்காக அதிபட்ச ரன்களை குவித்த தொடக்க ஜோடி என்கிற சாதனையைப் படைத்தார்கள். தற்போது தொடக்க வீரர் கான்வே விலகி இருப்பதால், சென்னை அணிக்கு எப்போதும் போல் வலுவான தொடக்க கிடைக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அத்துடன், ருதுராஜ் கெய்க்வாட் உடன் தொடக்க வீரராக யாரை அணி நிர்வாகம் களமிறக்க போகிறது என்பதைக் காணவும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஹர்ஷா போக்லே கருத்து
இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே, சி.எஸ்.கே-வுக்காக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் உடன் மற்றொரு தொடக்க வீரராக யாரை களமிறக்கலாம் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "கான்வே இல்லாத நிலையில், ஆண்டு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் அவை மிகவும் வேறுபட்டிருந்தாலும், நான் நம்புவது போன்ற மாற்று வீரர் ஒருவர் உள்ளார். சி.எஸ்.கே-யில் ரச்சின் ரவீந்திரன் வெளியே வந்து ஐபிஎல்-ல் ‘என்னைப் பார்த்து வாருங்கள்’ என்று சொன்னால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஏன்னெனில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 ரன்களை எட்டியுள்ளார். அவர் தனது வாழ்க்கையின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறார், மேலும் அவர் சி.எஸ்.கே-யில், ஒரு அற்புதமான சூழலில் விளையாடுகிறார். எனவே, எனது சி.எஸ்.கே-வுக்கான தொடக்க ஜோடி கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திராவாக இருக்கும்,” என்று ஹர்ஷா போக்லே கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“