IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்கும் 15-வது லீக் ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
2 போட்டிகளின் தேதிகள் திடீர் மாற்றம்
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் 2 போட்டிகளின் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. அது எந்த அணிகளின் போட்டிகள் என்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 17 ஆம் தேதி ஈடன் கார்டனில் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி ஒரு நாள் முன்னதாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, ஏப்ரல் 16 ஆம் தேதி இந்தப் போட்டி நடைபெற உள்ளது.
இதேபோல், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதும் ஆட்டம் இப்போது ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியை ஏப்ரல் 16 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது.
காரணம்
இந்த நிலையில், இந்த 2 போட்டிகளின் திடீர் தேதி மாற்றத்திற்கான காரணம் குறித்து தற்போது தெரிய வந்துள்ளது. நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் கட்டம் வருகிற 19 ஆம் தேதி அன்று தொடங்க உள்ளது. அதே நாளில் மேற்கு வங்கத்திலும் வாக்குப்பதிவு நடக்கிறது. இதனால், போட்டிக்கு போதிய பாதுகாப்பை வழங்க இயலாது என கொல்கத்தா காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே, போட்டியை ஒரு நாள் முன்னதாக, அதாவது ஏப்ரல் 16 அன்று அல்லது ஒரு நாளுக்குப் பிறகு ஏப்ரல் 18-க்கு மாற்றியமைக்க வேண்டும் என்று பெங்கால் கிரிக்கெட் சங்கம் பரிந்துரைத்துள்ளது. அவர்களின் பரிந்துரைப்படி தற்போது ஏப்ரல் 17 ஆம் தேதி ஈடன் கார்டனில் நடைபெறவிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 16-க்கு மாற்றப்பட்டுள்ளது.
கொல்கத்தா அணி நாளை டெல்லி அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்திற்காக தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“