தனது வேகப் பந்துவீச்சால் பஞ்சாப் கிங்ஸ் அணியை மிரட்டிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் மயங்க் யாதவின் ஐ.பி.எல் சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
17வது ஐ.பி.எல் தொடரின் 11வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்தப் போட்டியில் தனது அதிவேக பந்துவீச்சால் பஞ்சாப் கிங்ஸ் வீரர்களை மிரட்டினார் புதுமுக வீரர் மயங்க் யாதவ். இந்தப் போட்டியில் மயங்க் யாதவ் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து, 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.
போட்டியில் மயங்க் யாதவ் பந்துவீச்சின் வேகம் அனைவரின் கவனத்தை ஈர்த்தாலும், குறிப்பாக 12வது ஓவரின் முதல் பந்தில் ஷிகர் தவானுக்கு 155.8 கிமீ வேகத்தில் பந்து வீசியதன் மூலம் அனைவரின் புருவங்களையும் உயரச் செய்தார். 21 வயதான வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் பந்துவீச்சில் வேகத்தை மட்டும் காட்டாமல் விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்.
12வது ஓவரின் நான்காவது பந்தில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் தவான் இடையேயான சதம் பார்ட்னர்ஷிப்பை முறியடித்த போது, ஆட்டத்தின் முதல் திருப்புமுனையை வழங்கினார். பேர்ஸ்டோ (29 பந்துகளில் 42 ரன்கள்), அதிரடியாக ஆடி வந்த பிரப்சிம்ரன் சிங் (7 பந்துகளில் 19) மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்டரான ஜிதேஷ் ஷர்மா ஆகியோரை மயங்க் யாதவ் வெளியேற்றினார்.
மயங்க் தனது நான்கு ஓவர்களில் ஓவருக்கு 6.80 ரன்கள் வீதம் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் மற்றும் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
இந்தநிலையில், ஐ.பி.எல் போட்டிகளில் மயங்க் யாதவின் சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வலம் வருகின்றன. 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் 20 லட்ச ரூபாய்க்கு மயங்க் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அணி சேர்க்கை மற்றும் எதிர்பாராத காயங்கள் காரணமாக அவரது அறிமுகம் தாமதமானது.
சனிக்கிழமையன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தபோது, வலது கை வேகப்பந்து வீச்சாளர் அதை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தினார் மற்றும் நினைவில் கொள்ளக்கூடிய அறிமுக ஆட்டமாக இருந்தது.
"இது (எனது அறிமுகமானது) நன்றாக நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. அறிமுக போட்டியில் பதற்றம் இருக்கலாம் என்று மற்றவர்களிடம் இருந்து கேள்விப்பட்டேன். ஆனால் முதல் பந்திற்குப் பிறகு, எனது பதட்டம் அனைத்தும் போய்விட்டது" என்று மயங்க் யாதவ் கூறினார். மேலும் "அதிக பிரஷர் எடுக்க வேண்டாம், ஸ்டம்ப்களில் பந்து வீசுங்கள், வேகத்தைப் பயன்படுத்துங்கள் என்று எல்லோரும் சொன்னார்கள். அதைத்தான் நான் செய்தேன்," என்று மயங்க் யாதவ் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“