IPL 2024 | Karnataka: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டம் மூலம் ரூ 1.5 கோடியை இழந்த அரசு அதிகாரியின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடன் கொடுத்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், இதுவரை 3 பேரை கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹோசதுர்கா பகுதியை சேர்ந்த நீர்ப்பாசனத் துறை உதவிப் பொறியாளர் தர்ஷன் பாலு என்பவர், தான் சீக்கிரமாக பணக்காரர் ஆக வேண்டும் என்ற பேராசையில், அவ்வப்போது ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக நண்பர்கள், உறவினர்களிடம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
அவரால் சூதாட்டத்தால் போட்ட பணத்தை எடுக்க முடியாத நிலையில், கிட்டத்தட்ட 1.5 கோடி ரூபாயை சூதாட்டத்தால் இழந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள், தர்ஷன் பாலுவுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால், மனமுடைந்த தர்சனின் மனைவி ரஞ்சிதா (24) தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலறிந்த போலீசார் ரஞ்சிதாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ரஞ்சிதா எழுதியிருந்த தற்கொலை குறிப்பு கடிதத்தை போலீசார் மீட்டுள்ளனர். அதில், தனது கணவர் வாங்கிய கடனால், கடன் கொடுத்தவர்கள் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர் என்றும், சிலர் மிரட்டல் விடுத்து வருவதாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இறந்த ரஞ்சிதாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், மருமகன் தர்ஷன் பாலு மற்றும் கடன் கொடுத்த 13 பேர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர்களில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் பேசுகையில், ‘தர்ஷன் பாலு – ரஞ்சிதா தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கிரிக்கெட் சூதாட்டம் மூலம் ரூ.1.5 கோடி அளவிற்கு தர்ஷன் பாலு கடன் பெற்றுள்ளார். கடன் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. கிட்டத்தட்ட ரூ.54 லட்சம் மட்டுமே நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் தர்ஷன் பாலுவிடம் வேண்டுமென்றே சிலர் ஏமாற்றி மிரட்டி வந்துள்ளனர். இவ்விவகாரம் குறித்து ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“