IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் களமாடி வரும் இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக தலா 2 முறையும், 4 அணிகளுக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.
லீக் சுற்று முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் முடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான பிளே-ஆஃப்க்கு தகுதி பெறும். இதுவரை 56 போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இன்னும் 14 லீக் போட்டி மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனாலும் இன்னும் எந்த அணியும் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்யவில்லை. இதனால், பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்வதில் 10 அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், 10 அணிகளில் ஐ.பி.எல் 2024 பிளே-ஆஃப்க்கு தகுதி பெற எந்த அணிக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (16 புள்ளிகள்)
நடப்பு சீசனில் இதுவரை ஆடிய 11 போட்டிகளில் 8ல் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 புள்ளிகள் மற்றும் +1.453 என்ற சிறப்பான நெட் ரன்ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறது. அந்த அணி மீதமுள்ள 3 ஆட்டங்களில் வெற்றியை ருசிக்கும் பட்சத்தில் முதல் இடத்தில் நீடிக்கும். தோல்வியுற்றால் கூட, பிளே-ஆஃப்க்கு தகுதி பெறும் வாய்ப்புகள் அதிகம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் (16 புள்ளிகள் / +0.476)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 போட்டிகளில் ஆடிய 8ல் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அவர்கள் பிளே-ஆஃப்க்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, மீதமுள்ள 3 லீக் போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு வெற்றியையாவது பெற்றிருக்க வேண்டும். ஒரு போட்டிக்கு மேல் தோல்வியுற்றால் மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் நிகழும்.
12 புள்ளிகளில் 4 அணிகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் (12 புள்ளிகள் / +0.700), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (12 புள்ளிகள் / -0.065)
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் 11 ஆட்டங்களில் ஆடி தலா 12 புள்ளிகளுடன் 3-வது மற்றும் 4-வது இடத்தில் உள்ளன. இந்த 2 அணிகளும் தங்கள் மீதமுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் முடிக்க விரும்புவார்கள். ஒரு போட்டியில் தோல்வியுற்றால் கூட அவர்களுக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும். மேலும், மற்ற அணிகளின் முடிவுகளை நம்பியிருக்க வேண்டும்.
டெல்லி கேபிடல்ஸ் (12 புள்ளிகள் / -0.316) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (12 புள்ளிகள் / -0.371)
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 11 போட்டிகளிலிருந்து 12 புள்ளிகளைப் பெற்று 5வது இடத்திலும், டெல்லி கேபிடல்ஸ் 12 போட்டிகளிலிருந்து 12 புள்ளிகளைப் பெற்று 6வது இடத்தில் உள்ளன. இரு அணிகளுமே குறைந்த நெட் ரன்ரேட்டில் உள்ளன. இந்த அணிகள் பிளே - ஆஃப்க்குள் நுழைய மீதமுள்ள போட்டிகளில் நல்ல நெட் ரன்ரேட்டில் வெற்றி பெற வேண்டும். மாறாக, ஒரு போட்டியில் தோற்றால் கூட மிகப் பெரிய பின்னடைவு ஏற்படும்.
8 புள்ளிகளில் 4 அணிகள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (8 புள்ளிகள் / -0.049), பஞ்சாப் கிங்ஸ் (8 புள்ளிகள் / -0.187)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 11 போட்டிகளில் இருந்து தலா 8 புள்ளிகளுடன் 7 மற்றும் 8வது இடங்களில் உள்ளன. இரு அணிகளும் 14 புள்ளிகளுடன் முடிக்க மீதமுள்ள மூன்று போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். அத்துடன் அவர்களின் நெட் ரன்ரேட்டையும் அதிகரிக்க வேண்டும். இருப்பினும், அவர்கள் பிளே - ஆஃப்க்குள் நுழைய மற்ற அணிகளின் முடிவுகளை சார்ந்து இருக்க வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் (8 புள்ளிகள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக சமீபத்தில் வெற்றி பெற்றாலும், மும்பை இந்தியன்ஸ் 12 ஆட்டங்களில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் பின்தங்கிய நிலையில் உள்ளது. அந்த அணி பிளே-ஆஃப் தகுதி பெற மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் முடிக்க முடியும். அத்துடன் அவர்களின் நெட் ரன்ரேட்டையும் அதிகரித்து மற்ற அணிகளின் முடிவுகளை சார்ந்து இருக்க வேண்டும்.
குஜராத் டைட்டன்ஸ் (8 புள்ளிகள்)
குஜராத் டைட்டன்ஸ் தற்போது 11 போட்டிகளில் 4ல் வென்று 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. அவர்கள் பிளேஆஃப் ரேஸில் இருக்க மீதமுள்ள மூன்று போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். அவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் நெட் ரன்ரேட்டையும் அதிகரித்து மற்ற அணிகளின் முடிவுகளை சார்ந்து இருக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.