IPL 2024 | Mumbai Indians | Sunrisers Hyderabad: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று திங்கள்கிழமை மும்பையில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் எடுத்தார். மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா, பியூஸ் சாவ்லா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 174 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மும்பை இந்தியன்சுக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர்களான இஷான் கிஷன் 9 ரன்னுக்கும், ரோகித் சர்மா 4 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். நமன் திர் டக் அவுட் ஆகி அவுட் ஆனார். எனினும், அடுத்து களத்தில் இணைந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்காக ரன்களை குவித்தனர். அதிரடியாக மட்டையைச் சுழற்றிய சூர்யகுமார் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து சதம் அடித்தார்.
/indian-express-tamil/media/post_attachments/963d4e93ed8636be94e305f626d6f18b371fcbc5ef5e127b360465f15e3bba25.jpg)
சூர்யகுமார் 51 பந்துகளில் 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 102 ரன்களும், திலக் வர்மா 32 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 37 ரன்களும் எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 17.2 ஓவர்களில் இலக்கை எட்டிய மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த மும்பை அணி 8 புள்ளிகளுடன் 9வது இடத்துக்கு முன்னேறியது. ஐதராபாத் அணி அதே 4வது இடத்தில் நீடிக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் பிளே - ஆஃப்க்கு தகுதி பெற முடியுமா?
நடப்பு தொடரில் இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்வி என மும்பை அணி 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. தற்போது ஐதராபாத் அணிக்கு எதிராக அபாரமான வெற்றியை மும்பை அணி பெற்றுள்ள நிலையில், அடுத்த சுற்றான பிளே - ஆஃப்க்கு மும்பையால் இன்னும் தகுதி பெற முடியுமா? என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. அதற்கான விடையை அளிக்க இங்கு முயன்றுள்ளோம்.
தற்போதைய சூழலில் மும்பை அணி பிளே - ஆஃப்க்கு தகுதி பெறுவது கடினமான ஒன்றாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு இன்னும் சிறிய வாய்ப்பு உள்ளது. அந்த அணிக்கு லீக் சுற்றில் இன்னும் 2 போட்டிகள் உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மே 11)மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (மே 17) ஆகிய அணிகளுக்கு எதிராக மும்பை ஆட உள்ளது. அவர்கள் முதலில் இந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன், அவர்கள் மற்ற அணிகளின் முடிவுகளை நம்பியிருக்க வேண்டும்.
மேலும், தற்போது புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் லீக் சுற்று முடிவில், அந்த இரண்டு அணிகளும் முதல் 2 இடங்களுக்குள் முடிப்பது அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.
இதேபோல், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையில் நடக்கும் போட்டியை மும்பை அணி உற்று கவனிக்கும். இந்த 2 அணிகளில் தோல்வி பெறும் அணி மீதமுள்ள 2 போட்டியிலும் தோல்வி அடைய வேண்டும். அப்போது அந்த அணி 12 புள்ளிகளுடன் முடிக்கும்.
மும்பை மீதமுள்ள 2 போட்டிகளில் வெற்றியை ருசிக்கும் பட்சத்தில் அந்த அணி 12 புள்ளிகளுடன் தொடரை முடிக்கும். அவர்கள் பிளே ஆஃப் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க, தற்போது 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மீதமுள்ள 3 போட்டிகளில் தோல்வி பெற வேண்டும்.
இதேபோல், தற்போது 12 புள்ளிகளுடன் இருக்கும் அணிகள், முபையை முந்தும் வகையில் அந்த அணியை விட கூடுதலாக புள்ளிகள் எடுக்கக் கூடாது. அப்படி நடக்கும் போது நெட் ரன்ரேட் முக்கிய பங்கு வகிக்கும். அதனால், மும்பை மீதமுள்ள 2 போட்டியில் நல்ல நெட் ரன்ரேட்டில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“