IPL 2024: இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 முதல் பரபரப்பாக நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் தொடருக்கான லீக் சுற்று போட்டிகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. லீக் சுற்று முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப்க்கு செல்லும்.
அவ்வகையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப்க்குள் நுழைந்துள்ளன. இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (மே 21) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7:30 மணிக்கு நடைபெறும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் (குவாலிஃபையர் 1) புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் முதல் இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது.
இதனைத் தொடர்ந்து, அதே மைதானத்தில் நாளை புதன்கிழமை (மே 22) நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
குவாலிஃபையர் ஒன்றில் வெற்றி பெறும் அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 26 ஆம் தேதி) சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு நேரடியாகச் செல்லும்.
தோல்வியடைந்த அணி வருகிற வெள்ளிக்கிழமை (மே 24 ஆம் தேதி) எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். அதாவது, 2வது தகுதிச் சுற்றில் (குவாலிஃபையர் 1) ஆடும். இதில் வெற்றியை ருசிக்கும் அணி இறுதிப்போட்டிக்குள் 2வது அணியாக நுழையும்.
மழை அச்சுறுத்தல் - கூடுதல் நேரம் ஒதுக்கீடு
நடப்பு சீசனில் லீக் சுற்றுக்கான கடைசி போட்டிகளில் மழை பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. மைதானங்களில் புகுந்து விளையாடிய மழையால், கடைசி லீக் போட்டி உட்பட கடைசி 8 போட்டிகளில் மூன்று போட்டிகள் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில், ரசிகர்களுக்கு இனிப்பு செய்தியாக பிளேஆஃப் சுற்றில் நடைபெறும் போட்டிகளுக்கு கூடுதல் நேரத்தை ஐ.பி.எல் நிர்வாகம் ஒதுக்கியுள்ளது.
வழக்கமான லீக் சுற்று போட்டிகளின் போது ஒதுக்கப்படும் ஒரு மணி நேர இடைவெளியை ஒப்பிடும்போது, மழை காரணமாக தாமதமானால் ஆட்டத்தை முடிக்க பிளேஆஃப் போட்டிகளுக்கு கூடுதலாக 120 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் வழக்கமாக வழங்கப்படும் ஒரு மணி நேர இடைவெளியை விட இப்போது இரண்டு மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் 2024 பிளே - ஆஃப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே அறிமுகம்
இது தவிர, இந்த சீசனில் நடைபெறும் அனைத்து பிளே - ஆஃப் போட்டிகளுக்கும் ரிசர்வ் டே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது குவாலிஃபையர் 1, எலிமினேட்டர், குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப்போட்டி என 4 பிளே - ஆஃப் போட்டிகளுக்கும் ரிசர்வ் நாட்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஐ.பி.எல் நிர்வாகம்.
முன்னதாக, இறுதிப் போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் டே வழங்கப்பட்ட நிலையில், திட்டமிடப்பட்ட தேதியில் மழை காரணமாக ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டால், அது மறுதிட்டமிடப்பட்டு, ரிசர்வ் நாளில் முழுமையாக விளையாடப்படும். இது இரு அணிகளும் நியாயமான முடிவைப் பெறுவதை உறுதி செய்யும்.
ரிசர்வ் டே கூட மழை குறுக்கீடு செய்தால் என்ன நடக்கும்?
ரிசர்வ் நாட்களில் கூட, ஐ.பி.எல் 2024 பிளே -ஆஃப் போட்டி திட்டமிடப்பட்ட தேதி மற்றும் ரிசர்வ் நாள் ஆகிய இரண்டிலும் மழை காரணமாக கைவிடப்பட்டால், லீக் கட்டத்தின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் அணியின் நிலை வெற்றியாளரைத் தீர்மானிக்கும். பட்டியலில் முன்னணியில் இருக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
சூப்பர் ஓவர்
பிளே -ஆஃப் போட்டி டையானால், அதாவது இரு அணிகளும் சமநிலையில் முடிக்கும் பட்சத்தில் வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் விளையாடப்படும். சூப்பர் ஓவரும் சமன் செய்யப்பட்டாலோ அல்லது நேரமின்மையால் முடிக்க முடியாமலோ இருந்தால், புள்ளிப் பட்டியலில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
நியாயமான முடிவை உறுதி செய்யும் ஐ.பி.எல் பிளேஆஃப் விதிகள்
ஐ.பி.எல்-லின் திருத்தப்பட்ட விதிகள், போட்டிக்கான நியாயமான மற்றும் உற்சாகமான முடிவிற்கு அவர்களின் அர்ப்பணிப்பை நிரூபிக்கின்றன. பிளேஆஃப்களுக்கான நீட்டிக்கப்பட்ட விளையாட்டு நேரம் மற்றும் ரிசர்வ் நாட்களின் அறிமுகம் ஆகியவை மழை இடையூறுகளுக்கு எதிராக ஒரு இடைவெளியை வழங்குகின்றன. இந்த நடவடிக்கைகள் மூலம், ரசிகர்கள் பரபரப்பான பிளேஆஃப் தொடரை எதிர்பார்க்கலாம். இது உறுதியான மற்றும் தகுதியான முடிவிற்கு வழிவகுக்கும் என ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.