IPL 2024 | Chennai Super Kings | Sunrisers Hyderabad: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 46-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 212 ரன்கள் குவித்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக கெய்க்வாட் 98 ரன்னும், டேரில் மிட்செல் 52 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 213 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 78 ரன் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றது.
சென்னை அணியில் சிறப்பாக ஆடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். இந்த அபார வெற்றியின் மூலம் சென்னை அணி 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தோல்வி கண்ட பலம் பொருந்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் 2024 புள்ளிகள் பட்டியல் - IPL 2024 points table
ஐ.பி.எல் 2024 புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9 ஆட்டங்களில் 8 வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அதே, 10 புள்ளிகளுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5வது இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 6-வது இடத்திலும் உள்ளன.
8 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் 7 வது இடத்திலும், 6 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் 8-வது இடத்திலும் உள்ளன. 6 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் 9-வது இடத்திலும், அதே 6 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தொடர்ந்து கடைசி இடத்திலும் உள்ளது.
ஐ.பி.எல் ஆரஞ்சு தொப்பி 2024 - IPL ORANGE CAP 2024
நடப்பு சீசனில் 10 போட்டிகளில் விளையாடி 500 ரன்களை எடுத்தன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வசம் ஆரஞ்சு தொப்பி உள்ளது.
ஐ.பி.எல் 2024 இல் ஊதா நிற தொப்பி - IPL PURPLE CAP 2024
நடப்பு சீசனில் 9 போட்டிகளில் ஆடி 239 ரன்கள் விட்டுக்கொடுத்து 14 விக்கெட்டை கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரித் பும்ரா வசம் ஊதா நிற தொப்பி உள்ளது. அடுத்தபடியாக, 8 போட்டிகளில் ஆடி 296 ரன்கள் விட்டுக்கொடுத்து 14 விக்கெட்டை கைப்பற்றி சென்னை சூப்பர் கிங்ஸின் முஸ்தாபிசுர் ரஹ்மான் 2 வது இடத்தில் உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“