IPL 2024 | Chennai Super Kings | Lucknow Super Giants: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு லக்னோவில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இதில், டாஸ் வென்ற லக்னோ பவுலிங் வீசிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ரவீந்திர அரைசதம் அடித்த ஜடேஜா 57 ரன்களையும், ரஹானே 36 ரன்களையும், கடைசி கட்டத்தில் களமிறங்கிய அதிரடி காட்டிய தோனி 9 பந்துகளில் 28 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இதனையடுத்து, 177 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய லக்னோ அணி, 19 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் கேப்டன் கே.எல் ராகுல் 82 ரன்களும், குயின்டன் டி காக் 54 ரன்களும் எடுத்தனர்.
ஐ.பி.எல் 2024 புள்ளிகள் பட்டியல் - IPL 2024 points table
ஐ.பி.எல் 2024 புள்ளிகள் பட்டியலைப் பொறுத்தவரை, 7 ஆட்டங்களில் 6 வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 6ல் 4 போட்டியை வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்றைய லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவிய போதிலும், ஏற்கனவே 4 போட்டியை வென்று 8 புள்ளிகளுடன் அதே 3-வது இடத்தில் உள்ளது.
6ல் 4 போட்டியை வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியை ருசித்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8 புள்ளிகளுடன் அதே 5-வது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து, தலா 6 புள்ளிகளைப் பெற்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் 6-வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 7-வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 8-வது இடத்திலும் உள்ளனர். 4 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் 9-வது இடத்திலும், அதே 2 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தொடர்ந்து கடைசி இடத்திலும் உள்ளது.
ஐ.பி.எல் ஆரஞ்சு தொப்பி 2024 - IPL ORANGE CAP 2024
நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 361 ரன்களை எடுத்தன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வசம் ஆரஞ்சு தொப்பி உள்ளது.
ஐ.பி.எல் 2024 இல் ஊதா நிற தொப்பி - IPL PURPLE CAP 2024
நடப்பு சீசனில் 7 போட்டிகளில் ஆடி 13 விக்கெட்டை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரித் பும்ரா வசம் ஊதா நிற தொப்பி உள்ளது. இதேபோல், 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யுஸ்வேந்திர சாஹல் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“