IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.
இதில், ஒரு அணி, குறிப்பிட்ட 5 அணிகளுடன் தலா 2 முறையும், எஞ்சிய 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் மோத வேண்டும். இப்படி ஒரு அணி மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழையும்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோத உள்ளன.
இந்நிலையில், ஐ.பி.எல். 2024 தொடரில் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை குறித்து பார்க்கலாம். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இந்த ஆண்டுக்கான பரிசுத் தொகை விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு சாம்பியன் கோப்பையை வென்ற அணி ரூ. 20 கோடியும், 2-வது இடம் பிடித்த அணி ரூ.13 கோடியும் பரிசாக பெற்றது. அதே தொகைத்தான் இந்த ஆண்டும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தொடரில் அதிக ரன் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பியுடன் ரூ.15 லட்சமும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் வீரருக்கு ஊதா நிற தொப்பியுடன் ரூ.15 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“