ஐ.பி.எல் 17-வது சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று (மே 26) ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (எஸ்.ஆர்.எச்) அணிகள் பலப்பரீட்சை நடந்துகின்றன.
ஐ.பி.எல் தொடரில் இதுவரை 2 முறை (2012, 2014) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள கொல்கத்தா 3-வது முறையாக கோப்பையை வெல்லுமா? அல்லது ஒருமுறை (2016) சாம்பியன் பட்டம் வென்ற ஐதராபாத் அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லுமா? என்கிற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.
இந்நிலையில், கடந்தாண்டு ஐ.பி.எல் இறுதிப் போட்டியைப் போல இந்தாண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற குஜராத் மற்றும் சி.எஸ்.கே அணி இடையேயான போட்டி மழைக் காரணமாக மே 27-ல் இருந்து மே 28 ஆம் தேதிக்கு ரிசர்வ் தேதிக்கு மாற்றியது. அதே போல் இந்தாண்டும் நடக்குமோ என்று ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சேப்பாக்கம் மற்றும் சென்னை வானிலை நிலவரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதே போல் நேற்று (மே 25) இறுதிப் போட்டி நடைபெறும் எம்.ஏ. சிதம்பரம் மைதானம் மழை காரணமாக மூடப்பட்டு இரு அணி பயிற்சி அமர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
இன்று சென்னை வானிலை நிலவரம்
தி வெதர் சேனலின் கூற்றுப்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் 33-32 டிகிரி செல்சியஸ் வரை வானிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை 6.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 14% முதல் 7% வரை மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனினும் உண்மையில் மாலை வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். யார் கோப்பை-ஐ வெல்லப் போகிறார்கள் என இன்றைய போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“