ஐ.பி.எல். 2025-ம் ஆண்டு சீசனில் பலம்வாய்ந்த அணியாக கருதப்பட்ட சன்ரைசர்ஸ் தொடர்ந்து 2-வது முறையாக தோல்வியைத் தழுவி உள்ளது. விசாகப்பட்டினத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து சன் ரைசர்ஸ் அணியின் பலம்வாய்ந்த பேட்டிங் வரிசை மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிட்செல் ஸ்டார்க் அனைவரின் கனவையும் சுக்குநூறாக உடைத்தார்.
தன்னுடைய அனல் பறக்கும் பந்துவீச்சை ஸ்டார்க் வெளிப்படுத்த அதனை எதிர்கொள்ள முடியாமல் சன்ரைசர்ஸ் வீரர்கள் தடுமாறினர். அபிஷேக் சர்மா ஒரு ரன்னில் ரன் அவுட் ஆக, டிராவிஸ் ஹெட் 22 ரன்களிலும், இஷான் கிசன் 2 ரன்களிலும், நிதிஷ்குமார் டக் அவுட் ஆகியும் ஸ்டார்க் பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதனை அடுத்து சன்ரைசர்ஸ் தடுமாற அன்கிட் வர்மா மற்றும் கிளாசன் ஜோடி ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அங்கீத் வர்மா 41 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். இதில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். ஹென்றிச் கிளாசன் 19 பந்தில் 32 ரன்கள் எடுக்க சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவரில் 163 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
டெல்லி பந்துவீச்சில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும் குல்தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதை அடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் ஜேக் பிரேசர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 ரன்கள் எடுத்தார்.
டுப்ளிசிஸ் 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். இதேபோன்று அபிஷேக் போரெல் 18 பந்துகளில் 34 ரன்கள் எடுக்க, ராகுல் 5 பந்துகளில் 15 ரன்களும் ஸ்டெப்ஸ் 14 பந்துகளில் 21 ரன்களும் எடுக்க டெல்லி அணி 16 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 166 ரன்கள் எடுத்தது. இந்த வெற்றி மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் தற்போது 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி தற்போது 2 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.