10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் கடந்த 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு லக்னோவில் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி, பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, LSG vs PBKS LIVE Cricket Score Online
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ முதலில் பேட்டிங் ஆடியது.
அதன்படி, லக்னோ அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர். இதில் மிட்செல் மார்ஷ், அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இது லக்னோ ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
இதன் பின்னர், களம் கண்ட நிக்கோலஸ் பூரன் அணியின் ரன்களை கணிசமாக உயர்த்தினார். மற்றொரு புறம், ஐடன் மார்க்ரம் தனது பங்கிற்கு 18 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்தார். இவர் லாக்கி பெர்குசனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை கிளென் மேக்ஸ்வெல்லிடம் பறிகொடுத்தார். இதன் காரணமாக லக்னோ அணியினர் ரன்கள் எடுக்க தடுமாறினர். இதன் பின்னர், ஆயுஷ் படோனி மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் கரம் கோர்த்தனர்.
இதில் ஆயுஷ் படோனி, அணியின் ரன்கள் உயர்வதற்கு ஏற்ற வகையில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும், டேவிட் மில்லர் 19 ரன்களுடன் மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் அவுட்டானார். இதற்கு பின்பு இறங்கிய அப்துல் சமத் 12 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 27 ரன்கள் எடுத்து அதிரடியாக அணியின் ரன்களை உயர்த்தினார். எனினும், இவரது விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் கைப்பற்றினார்.
மறுமுனையில், ஆயுஷ் படோனியின் விக்கெட்டையும் அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். எனினும், அவுட்டாவதற்கு முன்பாக 41 ரன்கள் அடித்து அணியின் மொத்த ரன்களை படோனி உயர்த்தினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை லக்னோ அணி குவித்தது. பஞ்சாப் தரப்பில் இருந்து அர்ஷ்தீப் சிங் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
லாக்கி பெர்குசன், மாக்ஸ்வெல், மார்கோ ஜான்சன் மற்றும் சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இந்நிலையில், 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது
பஞ்சாப் அணியில் இருந்து பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இதில், பிரியான்ஷ் ஆர்யா 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக ஆடினார். தொடர்ச்சியாக பவுண்டரி, சிக்ஸர்கள் என பறக்க விட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
மறுபுறம் ஷ்ரேயஸ் ஐயரும், பிரப்சிம்ரன் சிங்குடன் கைகோர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். குறிப்பாக, 34 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 69 ரன்கள் விளாசிய பிரப்சிம்ரன் சிங், திக்வேஷ் சிங்கிடம் தனது விக்கெட்டை இழந்தார்.
இதன் பின்னர், ஷ்ரேயஸ் ஐயருடன், நேஹல் வதேரா ஜோடி சேர்ந்து தனது பங்கிற்கு வெளுத்து வாங்கினார். அதன்படி, 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பஞ்சாப் அணி 177 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் ஐயர் 52 ரன்களுடனும், நேஹல் வதேரா 43 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட்(கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், திக்வேஷ் சிங் ரதி, ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், ரவி பிஷ்னாய்
பஞ்சாப் கிங்ஸ்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், சூர்யன்ஷ் ஷெட்ஜ், மார்கோ ஜான்சன், லாக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.