10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் கடந்த 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, MI vs KKR Live Cricket Score Updates
இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
கொல்கத்தா அணியில் இருந்து குயின்டன் டி காக் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இதில், ட்ரென்ட் போல்ட் வீசிய பந்தில் ரன்கள் ஏதும் எடுக்காமல் சுனில் நரேன் ஆட்டமிழந்தார். இதேபோல், குயின்டன் டி காக் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் தீபக் சஹரிடம் தனது விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து, ரஹானே மற்றும் அங்கரிஷ் ரகுவன்சி ஆகியோர் கரம் கோர்த்தனர். ஆனால், மும்பை பௌலர்களின் அதிரடி தாக்குதல் முன்பு இந்த ஜோடியும் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அஷ்வனி குமார் வீசிய பந்தை அடிக்க முயற்சித்த ரஹானே, அதனை திலக் வர்மாவிடன் கேட்ச் கொடுத்தார். இதன் மூலம் 7 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடித்து 11 ரன்களுடன் அவர் பெவிலியன் திரும்பினார்.
மற்றொரு புறம், 16 பந்துகளில் 3 பவுண்டரி மற்றுன் 1 சிக்ஸர் அடித்த அங்கரிஷ் ரகுவன்சி, 26 ரன்களில் அவுட்டானார். இதன் பின்பு களம் கண்ட வெங்கடேஷ் ஐயரும் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்து தீபக் சஹரிடம் தனது விக்கெட்டை இழந்தார். இதேபோல், ரிங்கு சிங்கும் 14 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
குறிப்பாக, மும்பை பௌலர்களின் அதிரடி பௌலிங்கிற்கு தாக்குப் பிடிக்க முடியாத கொல்கத்தா அணி மிகவும் தடுமாறியது. ரமந்தீப் சிங் மட்டுமே 12 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 22 ரன்கள் சேர்த்தால். ரஸல் 5 ரன்கள், ஹர்ஷித் ரானா 4 ரன்கள் என சில வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மும்பை அணியில் இருந்து அறிமுக பௌலராக களமிறங்கிய அஷ்வனி குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தீபக் சஹர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், போல்ட், பாண்டியா, விக்னேஷ் மற்றும் மிட்சேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இறுதியாக 16.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் கொல்கத்தா அணி இழந்தது. அதன்படி, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ரையான் ரிக்கெல்டான் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரோஹித் ஷர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர், களமிறங்கிய வில் ஜாக்ஸும் 16 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
ஆனால், ரையான் ரிக்கெல்டான் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் பார்ட்னர்ஷிப் போட்டு அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். குறிப்பாக, 41 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை பறக்க விட்ட ரையான் ரிக்கெல்டான் 62 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார், சூரியகுமார் யாதவும் தனது பங்கிற்கு 9 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர் என 27 ரன்கள் சேர்த்தார்.
இறுதியாக, 12.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 121 ரன்கள் அடித்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி பெற்றது. இந்த சீசனில் மும்பை அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.