10 அணிகள் பங்கேற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இந்தத் தொடரில், லீக் சுற்றுப் போட்டிகள் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமையுடன் முடிந்தது. இந்த சுற்று முடிவில் பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆஃப்' சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மல்லுக்கட்டுகிறது.
இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உண்டு. தோல்வி காணும் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் மோதும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லாப்பூரில் மழை பெய்யுமா?
இந்நிலையில், ஐ.பி.எல் 2025 இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதும் போட்டி நடைபெறும் முல்லாப்பூரில் மழை பெய்யுமா?, ஒருவேளை மழை பெய்து போட்டி ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்? என்பது தொடர்பாக ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் பரபரப்பாக பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், அக்யூவெதரின் கூற்றுப்படி, முல்லாப்பூரில் நாள் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அங்கு வெப்பநிலை சுமார் 32 செல்சியஸ் ஆக இருக்கும், ஈரப்பதம் அதிகபட்சம் 30 முதல் குறைந்தபட்சம் 40 டிகிரி வரை இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 20 கிமீ வேகத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வானம் பெரும்பாலும் தெளிவாக இருக்கும் என்றும், குறைந்தபட்ச மேக மூட்டத்துடன், முழுமையான மற்றும் தடையற்ற போட்டி நடக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?
மழையால் ஆட்டம் தடைபட்டு போட்டி ரத்து செய்யப்பட்டால், பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஏனென்றால் லீக் சுற்று முடிவில் புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணிதான் முதலிடம் பிடித்தது. அந்த அணி 14 போட்டிகளில் ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்று 19 புள்ளிகள் மற்றும் +0.372 நெட் ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. ஆர்.சி.பி அணியும் 19 புள்ளிகளுடன் முடிந்தது. ஆனால் அவர்களது நெட் ரன் ரேட் +0.301 என்று இருக்கிறது.