/indian-express-tamil/media/media_files/2025/05/13/4fxgUUVPezRczvqrTbwY.jpg)
ஆர்.சி.பி அணியின் கேப்டன் ரஜத் படிதார் காயம் காரணமாக தவித்து வருகிறார். இதேபோல், சொந்த நாடு திரும்பிய ஆஸ்திரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளார் ஜோஷ் ஹேசல்வுட் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
10 அணிகள் பங்கேற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வந்தது. இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது.
இந்நிலையில், போர்ப்பதற்றம் தணிந்ததை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) ஐ.பி.எல். போட்டி வருகிற சனிக்கிழமை (மே.17) முதல் மீண்டும் தொடங்கி நடைபெறும் என அறிவித்துள்ளது. அன்றைய தினம் இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025: RCB sweat over Patidar injury, Hazlewood unlikely to return
இந்த நிலையில், நடப்பு தொடரில் 11 போட்டிகளில் ஆடி 8 வெற்றியுடன் 16 புள்ளிகளை பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது, அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் காயம் காரணமாக தவித்து வருகிறார். இதேபோல், சொந்த நாடு திரும்பிய ஆஸ்திரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளார் ஜோஷ் ஹேசல்வுட் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
ரஜத் படிதார் காயம்
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதாரின் விரலில் காயம் ஏற்பட்டது. இந்தக் காயம் குணமடைய நீண்ட காலம் ஆகலாம் என்று தெரிகிறது. அதனால், அவர் மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகளில் ஆட வாய்ப்பு குறைவுதான் என்று தெரிகிறது. தவிர, அவர் ஒரு இம்பேக்ட் வீரராக வந்து பேட்டிங் செய்ய முடியும் என்றாலும், பயிற்சி அமர்வுகளில் பேட்டிங் செய்ய வேண்டாம் என்று அவருக்குச் சொல்லப்பட்டுள்ளது.
எனவே, எதிர் வரும் நாட்களில் அவரது காயம் எவ்வாறு குணமடைகிறது என்பதைப் பொறுத்து அவர் களமிறங்க வாய்ப்புள்ளது. ஒருவேளை அவரது காயம் குணமடையவில்லை என்றால், அவரால் தொடர்ந்து ஆட முடியமால் போகலாம் என்றும், அவர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியா ஏ அணியில் இடம் பெறாமல் போகலாம் என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
ரஜத் படிதார் தொடரில் இருந்து விலகும் பட்சத்தில், முன்னணி வீரரும் விக்கெட் கீப்பருமான ஜிதேஷ் சர்மாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்படலம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, தொடை எலும்பு காயம் காரணமாக ஆர்.சி.பி அணியின் மற்றொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
ஹேசல்வுட் - சந்தேகம்
ரஜத் படிதாரைத் தவிர, ஆர்.சி.பி அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் அணியில் இடம் பெறுவாரா என்பது குறித்தும் நிச்சயமற்ற தன்மை உள்ளது. தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பிறகு, சொந்த நாடு திரும்பிய அவர், ஏற்கனவே தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான கடைசி போட்டியை அவர் தவறவிட்டார்.
மேலும், இந்தியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் இடம் பெறாத பிறகு, ஹேசில்வுட் இலங்கைக்கு ஆஸ்திரேலியாவின் சுற்றுப்பயணத்தையும் அதைத் தொடர்ந்து வந்த சாம்பியன்ஸ் டிராபியையும் தவறவிட்டார். முழு ஐபிஎல் போட்டிக்கும் அவர் இடம் பெறுவது குறித்து சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் அவர் நீண்ட மறுவாழ்வுக்குப் பின் அணியில் சேர்ந்தார்.
ஜூன் 11 ஆம் தேதி லண்டனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் தகவல்களின்படி, ஹேசில்வுட் மீண்டும் ஆர்.சி.பி அணியில் சேர வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.