10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் கடந்த 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறிய 14-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, RCB vs GT LIVE Cricket Score Online
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு முதலில் பேட்டிங் ஆடியது.
பெங்களூரு தரப்பில் இருந்து பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெறும் 7 ரன்கள் மட்டுமே அடுத்த கோலி, அர்ஷத் கான் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். இதேபோல், தேவ்தத் படிக்கல்லும் வந்த வேகத்தில் 4 ரன்களுடன் நடையை கட்டினார். மேலும், பில் சால்டும் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரின் விக்கெட்டையும் முகமது சிராஜ் கைப்பற்றினார். அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி தடுமாறியது.
எனினும், லியாம் லிவிங்ஸ்டன் தனது அதிரடி ஆட்டம் மூலம் அணியின் ரன்களை உயர்த்தினார். மற்றொரு புறம் ரஜத் படிதார், 12 ரன்களுடன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனிடையே, லியாம் லிவிங்ஸ்டன் 40 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்த நிலையில், அவரது விக்கெட்டை முகமது சிராஜ் கைப்பற்றினார்.
அடுத்ததாக வந்த ஜிதேஷ் சர்மாவும் தனது பங்கிற்கு 33 ரன்களை விளாசினார். க்ருனால் பாண்டியா 5 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இறுதியாக டிம் டேவிட் 18 பந்துகளில் 32 ரன்கள் என அதிரடி காண்பித்தார். அதன்படி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை பெங்களூரு அணி குவித்தது.
குஜராத் அணியில் இருந்து அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் 19 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாய் கிஷோர் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றிய நிலையில், அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்நிலையில், 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது.
அதன்படி, குஜராத் அணியில் இருந்து சாய் சுதர்சன் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில், ஷுப்மான் கில் 14 ரன்களுடன் ஆட்டமிழந்தார். ஆனால், அடுத்ததாக களமிறங்கிய ஜாஸ் பட்லர், பெங்களூரு பௌலர்களை வெளுத்து வாங்கினார். மற்றொரு புறம், சாய் சுதர்சனும் தனது பங்குக்கு 36 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து, ஜாஸ் பட்லருடன், ருத்தர்ஃபோர்ட் கரம் கோர்த்தார். இவர்கள் இருவரும் அதிரடியாக ஆடி குஜராத் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். குறிப்பாக, 39 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 73 ரன்களை ஜாஸ் பட்லர் விளாசினார். ருத்தர்ஃபோர்டும் 18 பந்துகளில் மூன்று சிக்ஸர், 1 பவுண்டரி என 30 ரன்கள் சேர்த்தார். இவர்கள் இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவாக, 17.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை குஜராத் அணி எடுத்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், ஷுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ராகுல் தெவாடியா, அர்ஷத் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா.